Tuesday, May 20, 2008

சுயநலத்தின் இரண்டு முனைகள்

சுயநலத்தின் இரண்டு முனைகள்

மத்திய அரசு கொண்டு வர இருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு சுற்றுப் போராட்டம் நடத்திய மருத்துவ மாணவர்கள், தமிழக முதல்வரும் மருத்துவத்துறை அமைச்சரும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் தற்காலிகமாகத் தமது வகுப்பறைகளுக்குத் திரும்பியிருக்கின்றனர்.

ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்வித் திட்டத்தின்படி, பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, நான்கரை ஆண்டுகாலம் மருத்துவக் கல்லூரிப் படிப்புடன், 4,500 ரூபாய் உதவித் தொகையுடன் ஓராண்டு உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றித் தேறிய மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவர் பட்டம் (எம்.பி.பி.எஸ்.) வழங்கப்பட்டு வந்தது. புதிதாகக் கொண்டு வரப்படும் திட்டத்தின்படி, உள்பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிய பிறகு, நான்கு மாதம் கிராமப்புற மருத்துவமனையிலும், அடுத்த நான்கு மாதம் வட்டத் தலைநகர் மருத்துவமனையிலும், கடைசி நான்கு மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் — ஆக ஓராண்டு காலம் 8,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுக் கொண்டு வெளிப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகுதான் அவர்களுக்கு இளங்கலை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) பட்டம் வழங்கப்படும்.
""இது கிராமப்புற ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்யும் நல்ல நோக்கத்துடன் கொண்டு வரப்படும் திட்டம். இதை எதிர்ப்பவர்கள் கிராமப்புற விவசாய மக்களுக்கு எதிரானவர்கள்'' என்று மத்திய ""சமூக நலத்துறை'' அமைச்சர் அன்புமணியும் அவரது குடும்பக் கட்சியின் நிறுவனர் இராமதாசும் பேசி வருகின்றனர்.

கிராமப்புற ஏழை மக்களுக்குச் சேவை செய்வதையே இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பது உண்மை அல்லவென்று அத்திட்டத்தைச் சற்றுக் கவனத்தோடு பார்த்த மாத்திரத்தில் அறிந்து கொள்ள முடியும். ஒரு நான்கு மாதங்களில் கிராமப்புற மருத்துவமனைகளில், போதிய பயிற்சியும் அனுபவமும் இல்லாத இளம் மருத்துவர்கள் கிராமப்புற மக்களுக்கு என்ன சேவை செய்து விட முடியும்! ஆகவே, இப்போது அரசு கொண்டு வந்திருக்கும் திட்டத்தை கல்லூரியில் மருத்துவப் படிப்பு முடித்த பிறகு ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் உள் மருத்துவராகவும், மேலும் ஓராண்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லாத வெளி மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவராகவும் பணியாற்றுவதைக் கட்டாயமாக்குகிறது என்று வேண்டுமானால் கருதலாம்.

இவ்வாறு, இளம் மருத்துவர்களின் பயிற்சிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பதை கிராமப்புறக் கட்டாய சேவைத் திட்டம் என்று அரசும், மருத்துவக் கல்விக் காலத்தை ஆறரை ஆண்டுகளாக அதிகரிப்பதாக மருத்துவ மாணவர்களும் தவறான கருத்தை மக்களிடம் கூறி வருகின்றனர். இரண்டு தரப்பாரிடமும் உண்மையைச் சொல்லும் நேர்மையான அணுகுமுறை இல்லை.

இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு மாணவர்கள் தரப்பில் சில காரணங்கள்கூறப்படுகின்றன. கல்விக் கடன் பெற்று மருத்துவப்படிப்பு முடிக்கும் தாங்கள் உடனடியாக வேலைக்குப் போய் கடனடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு தரும் 8000 ரூபாய் உதவித் தொகையைக் கொண்டு கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் போகிறது. உடனடியாக வேலைக்குப் போகாவிட்டால் படிக்க வைத்த பெற்றோர்களின் சுமை ஏறி விடுகிறது. பட்டமேற்படிப்புக்குச் செல்வதில் பிரச்சினை ஏற்படும்; உரிய வயதில், குறிப்பாகப் பெண் மருத்துவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகிறது இவ்வாறான தமது சொந்த நலன்களுக்கான காரணங்களோடு, சில பொதுநல மக்கள் நலப் பிரச்சினைகளையும் போராடும் மருத்துவ மாணவர்கள் சேர்த்துக் கொள்கிறார்கள்.

கிராமப்புற மருத்துவமனைகளில் மருந்து, கருவிகள், செவிலியர் போன்றவை போதிய அளவில் இல்லாதபோது எப்படி கிராம மருத்துவ சேவை செய்ய முடியும்? கிராம மருத்துவ மனைகளில் மருத்துவப் பணியிடங்கள் காலியாக உள்ளன. உரிய மருத்துவர்களை நியமிக்காமல் பயிற்சி மருத்துவ மாணவர்களை அனுப்புவதால், ஏற்கெனவே பட்டம் பெற்ற மருத்துவர்களின் வேலை வாய்ப்புகள் பறிக்கப்படும். மேலும் மருத்துவச் சேவைக்கான அரசுச் செலவைக் குறைக்கும்படி உலக வங்கி உத்தரவிட்டுள்ளது; அதற்காக பயிற்சி மாணவர்களை சுழற்சி முறையில் அனுப்புவதன் மூலம் புதிய மருத்துவர்களை நியமித்து, மருத்துவ வசதிகளைப் பெருக்க வேண்டிய கடமையிலிருந்து தவறும் அரசு மக்களை ஏய்க்கவே இத்திட்டத்தைக் கொண்டு வருகிறது.

கிராமப்புற மருத்துவ சேவையில் அரசின் பொறுப்பின்மை தவறுகள் குறித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைதான்; என்றபோதும் அவற்றுக்காக மருத்துவ மாணவர்கள் ஒருபோதும் கவனஞ் செலுத்தியதோ, குரல் கொடுத்ததோ கிடையாது; அதேசமயம் அரசின் புதிய திட்டத்தால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மருத்துவ மாணவர்கள் கூறும் எந்தக் காரணத்தையும் ஏற்க முடியாது.

உதாரணமாக, கல்விக் கடன் அடைப்பதில் பிரச்சினை வரும் என்றால், அதற்குரிய காலத்தை நீட்டிக்கும்படியும், எளிய தவணையாக்கும்படியும், உதவித் தொகையை அதிகரிக்கும்படியும் கோரலாமே! மருத்துவ உயர்கல்விக்கான தகுதிகளில் ஒன்றாக இந்தப் பயிற்சிக் காலத்தையும் கணக்கிடும்படி கோரலாமே! இந்தப் பயிற்சிக் காலத்திலேயே தேவையானால் திருமணம் செய்து கொள்வதை எது தடுக்கிறது?

எவ்வளவு விரைவில் பட்டம் பெற்று தொழில் தொடங்கி காசு பணத்தைப் பார்ப்போம், வரதட்சிணை பெற்று வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற சிந்தனை கணிசமான அளவு மருத்துவ மாணவர்களைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் மறுக்க முடியாது. கிராமப்புற மருத்துவமனைகளில் பணிநியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் அங்கு பொறுப்பேற்க மறுப்பதும், பொறுப்பேற்ற பிறகும் அருகிலுள்ள நகரங்களில் குடியேறி தனியே தொழில் செய்வதையும் காண்கிறோம். பலர் பணி நேரங்களில் மருத்துவமனைகளில் இருப்பதுமில்லை; நோயாளிகளை மரியாதையுடன் நடத்தி உரிய சிகிச்சையும் அளிப்பதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை முடித்து, இளங்கலை மருத்துவப் பட்டம் பெற்றிருந்தாலும், சுயமாக மருத்துவச் சேவை செய்வதற்கு ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்தாண்டுகளுக்காவது முதுநிலை மருத்துவர்களின் கீழ் பணியாற்றி அனுபவம் பெற வேண்டியது அவசியமென்பதை அவர்கள் உணர வேண்டும். இந்தக் காலத்தை உயர் கல்விக்கான தகுதியாகக் கருத வேண்டும் என்றும், ஏற்புடைய ஊதியத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் இளநிலை மருத்துவர்கள் கோருவதுதான் அவர்களின் தொழிலுக்கே அவசியமாக உள்ளது.

அரசு கொண்டு வரவிருக்கும் கிராமப்புறக் கட்டாய மருத்துவ சேவைத் திட்டம் உண்மையில் கிராமப்புறங்கள் நலனுக்கானதே கிடையாது. ஒரு நான்கு மாதமே கிராமப்புற மருத்துவமனைகளில் பணியாற்றுவதைப் புதிய திட்டம் கோருகிறது. மத்திய அரசு தனது மொத்த ஆண்டு வருவாயில் 18 சதவீதத்தை இராணுவத்திற்குக் கொட்டும் அதேசமயம், 1.3 சதவீதமே மருத்துவத்துறைக்கு ஒதுக்குகிறது; மாநில அரசு 5.5 சதவீதமே ஒதுக்குகிறது; மருத்துவப் பணியிடங்கள் பலவும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில், குறிப்பாகக் கிராமப்புற மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளோ, மருந்துகளோ கருவிகளோ கிடையாது. இவற்றையெல்லாம் கவனிக்காமல், ஒரு நான்கு மாதம் இளம்நிலை பயிற்சி மருத்துவர்களை அனுப்புவதைக் கிராமப்புற மக்களின் மருத்துவச் சேவையாக வாய் கிழியப் பேசுகிறார்கள், இராமதாசர்கள்.

உண்மையில் கிராமப்புற மருத்துவ சேவையில் அக்கறையுடையதாக செயல்படும் அரசாக இருந்தால், ஐந்தாண்டுகளுக்காவது வேலை உத்திரவாதமளித்து இளம்நிலை மருத்துவர்களைக் கிராமப்புற மருத்துவமனைகளில் நியமிக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து அங்கு பணியாற்றுவதை ஊக்குவிக்கும் வகையில் ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். வசிப்பிடம், வாகன வசதிகள் போன்றவை வழங்க வேண்டும். போதிய மருத்துவக் கருவிகள், படுக்கை, பிற கட்டுமான வசதிகள், மருந்துகள், உதவியாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு பணிபுரியும் தகுதி அடிப்படையிலேயே மருத்துவ உயர்கல்விக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த வகையிலான மருத்துவ சேவையை மேற்பார்வையிடும் மக்கள் பிரதிநிதிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மக்கள் நலனில் அக்கறையுடைய கோரிக்கைகளுக்காக அல்லாமல், தங்கள் சொந்த நலனுக்காக மட்டும் போராடும் """வெள்ளுடை வேந்தர்களை'' மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்?·
.ஆர்.கே.
நன்றி - பி.இரயாகரன் http://tamilarangam.blogspot.com

No comments:

இணைப்பு