Tuesday, July 15, 2008

அன்பார்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்களே!

 • அரசு கல்விக் கட்டணம் இல்லங்குது
  அப்பறம் பி.டி.ஏ மூலமா கொள்ளையடிக்குது!
 • கல்வி கொடுத்த கவர்மெண்டு
  டாஸ்மாக் சாராயத்தை விற்குது!
  கள்ளச்சாராய ரவுடிகளெல்லாம் கல்வியை விற்குறான்!
  இனியும் ஒதுங்கிச் செல்வது அவமானம்!
  ஓங்கி குரலெழுப்புவதே தன்மானம்!
 • படிக்க வகுப்பு இல்ல
  பாடம் நடத்த வாத்தியார் இல்ல
  குடிக்கக் கூட தண்ணி இல்ல
  அடிப்படை பிரச்சனையை
  தீர்த்து வைக்க வக்கில்லாமல்
  'அனைவருக்கும் கல்வி' என்று
  ஆளுகிறவங்க பேசுவது அத்தனையும் ஏமாற்று!
  பு.மா,இ.மு தலைமையிலான போராட்டமே ஒரே மாற்று!
 • செமஸ்டர் வந்தது! தேர்வு இரண்டு முறையானது!
  பாக்கெட் பணமோ பறிபோகுது!
 • சிப்டு முறை வந்தது! நேரம் மட்டுமே மாறுது!
  புதுசா வாத்தியாரும் போடல! அடிப்படை பிரச்சனைளும் தீரல!
 • ஜனநாயகம் என்று சொல்லி கவுன்சிலிங் நடக்குது!
  ஜனநாயகத்தை கொடுக்கின்ற
  கல்லூரித் தேர்தல் எங்கே போனது!
 • கல்லூரியைக் கை கழுவது
  கல்வி வியாபாரத்தை கொழுக்க வைக்க
  அரசு பல்கலைக்கழகமா மாற்றுது!
  இதுவரை நீ.படித்து வந்த
  பி.ஏ.,பி.எஸ்.சியும் பறிபோகுது!
 • எப்படியும் எதிர்காலம் உண்டென்பது பகற்கனவு!
  இதற்கெதிராக போராட வேண்டுமென்பதே
  பகத்சிங் கண்ட கனவு
  இன்றே பு.மா.இ.மு-வில் இணைந்திடு!
  உரிமைக்கான போராட்டத்தை தொடங்கிடு!!

அன்பார்ந்த இளைஞர்களே!

 • குடிக்கத் தண்ணி இல்ல!
  குப்பவாரத் துப்பில்ல!
  குடலைப் பிடுங்கும் கால்வாய் நாற்றம் தீரல!
  குண்டும் குழியுமான சாலை இன்னும் மாறல!
  விளையாடக்கூட ஒரு இடம் இல்ல!
  உடற்பயிற்சி கூடமும் இல்ல!
  ஊருக்கொரு டாஸ்மாக் சாராயக்கடைய
  உன்னைச் சீரழிக்க திறந்திருக்கு
  இதை கண்டுகொள்ளாத ஊராட்சி
  வரியை மட்டும் போடுது!
  ஊரையே கொள்ளை அடிக்குது!
  ஊமையாக இருப்பது அவமானம்!
  உரத்த குரலெழுப்புவதே தன்மானம்!
 • இளைஞனே! ஒ இளைஞனே!
  பெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., பட்டம்!
  ஆள் எடுக்க அரசு போட்டது தடைச்சட்டம்!
  ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க திட்டம்!
  வேலை கிடைக்குமுன்னு போனா
  அன்று சோற்றுக்கே திண்டாட்டம்!
 • சுயதொழில் தொடங்க டி.வி, எஃப்.எம்-ல்
  அதிகாரி ஆலோசனையால் சிறுமுதலீடு கேட்டுப்போக
  சிபாரிசு கேட்டு வங்கி சித்ரவதை செய்யுது!
 • கலெக்சன், கடன் கொடுக்கும் வேலைன்னு
  வங்கிகளைத் தேடி அலையற
  ஃபோர்டு, ஹீண்டாய், நோக்கியோல
  வேலை கிடைக்குமுன்னு நெனைக்கிற
  கிடைச்சதெல்லாம் கீழ்நிலை வேலைதான்
  உன்னை அடிமையாக்குற வேலைதான்!
  இதுவும் நெலைக்குமான்னு நெனைச்சிப்பார்த்து
  இழந்த வாழ்வை மீட்டெருக்கப் போராடு!
  அதற்கு பு.மா.இ.மு-வில் இன்றே இணைந்திடு!

Saturday, July 12, 2008

கல்விக் கடவுள் டில்லி பாபு!

கல்விக் கடவுள் சரசுவதி
கையிலிருக்கும்
வீணையை எறிந்து
வெகுநாளாயிற்று
எடை மிசினை ஏந்தியபடி
எதிர்பார்த்திருக்கிறான்
பக்தர்களை.

மெனக்கெட்டுப் படித்து
நல்ல மதிப்பெண் வாங்கிய
பையனை
பணக்கட்டு ஏதுமின்றி
பள்ளிப்படியிலேற்றினார்
சுமைதூக்கும் தொழிலாளி
டில்லிபாபு.

பத்தாயிரம்
நன்கொடை தந்தால்
பதினோராம் வகுப்பு
கிடைக்குமென்று
கட்டாயமாகச் சொன்னார்
பள்ளி நிர்வாகி
ஆலேசமடைந்த தொழிலாளியை
ஆற்றுப்படுத்தினர்
சில ஆசிரியர்கள்.

இங்காவது இத்தோடு,
மற்ற இடத்தில்
அதுக்கு இதுக்கு என்று
பணத்தைப் பறிப்பான்
கொத்தோடு!
கூட்டிக் கழித்துப்பார்!
பேசாமல்
கேட்டதைக் கொடுத்து
பிள்ளையைச் சேர்!
என்று
கணக்கு வாத்தியார்
புரியவைத்தார்.

கஷ்டப்பட்டு விதைச்சாதான்
இஷ்டப்பட்ட விளைச்சல் வரும்!
பருவத்தே பயிர் செய்ய
பணத்தைப் பார்க்காதே!
என்று
புத்தி சொன்னார்
புவியியல் ஆசிரியர்.

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு -
அதுபோல
ஒவ்வொரு படிப்புக்கும்
ஒரு விலை உண்டு
என்ன நீ இது புரியாம இருக்க?
என்று
எரிச்சலடைந்தார்
அறிவியல் ஆசிரியர்.

தன்மையோடு இடைமறித்தார்
தமிழாசிரியர்;
உயிரும் மெய்யும் சேர்ந்தாதன்
உயிரமெய்யெழுத்து
அதுபோல-
பணமும் படிப்பும் சேர்ந்தால்தான்
பளபளப்பு
பணத்துக்காக
நல்ல பள்ளியை விட்டால்
அப்புறம்
உன் பையனின் தலையெழுத்து?

எதற்கும் சம்மதிக்காத
தொழிலாளியைப் பார்த்து
"நீ போய்யா வெளியிலே" என்று
வெறுப்புடன்
சத்தம் போட்டார் நிர்வாகி.
பதிலுக்கு
"இதாண்டா ஆயுத எழுத்து"
என்று
சுமைதூக்கும் கொக்கியால்
தலையில் எழுத..
இரத்த வெள்ளத்தில்
நிர்வாகி.
கைதாகி, வழக்கில்
தொழிலாளி.

இப்போது-
கட்டாய நன்கொடை
பள்ளியில் இரத்து.
கல்விக் கபாலத்தை
திறந்து விட்ட
டில்லி பாபுவை
கையெடுத்துக் கும்பிடுகிறது ஊர்.

-துரை.சண்முகம்

'கட்டாய நன்கொடை கேட்ட பள்ளி நிர்வாகியைத் தாக்கிய தொழிலாளி கைது' என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை.


நன்றி : புதிய கலாச்சாரம் ஜுலை 2008
இணைப்பு