Sunday, September 14, 2008

மாரத்தான் வியாபாரத்தில் மாணவன் கொலை!

சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று மாரத்தான் போட்டியை 'கிவ் லைப்' என்ற அமைப்பு நடத்தியது. கலைஞரின் தற்போதைய டெல்லி வாரிசு கனிமொழி மற்றும் சூர்யா, மாதவன் என நடிகர்களின் படங்களை போட்டும் நகர் முழுவதும் பிரம்மாண்டமாக விளம்பரம் இப்போட்டிக்காக செய்யப்பட்டு இருந்தது. ஏழை குழந்தைகளுக்கு 'கல்வி கொடுப்பதற்காக' என அறிவித்து "ஓடுவதற்கு" பதிவு கட்டணமாக ரூ 100ம், "ஸ்பான்சர்" என பலரிடம் நன்கொடையும் ஆக மொத்தத்தில், இவ்வியாபாரத்தில் கோடிக்கணக்கில் நிதி திரட்டப்பட்டது.

போட்டியன்று ஆற்காடு வீராச்சாமி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கில், கனிமொழி உள்பட பல நடிகர்கள் கொடியசைக்க சுமார் 1.5 லட்சம் பேர் போட்டியில் பங்கேற்றனர். ஆனால் போட்டிக்கு விளம்பரம் செய்தளவில் சிறிதளவு கூட போட்டியில் பங்கேற்க வந்தவர்களின் மருத்துவ உதவிக்கு மருத்துவர்களோ, மருந்து மற்றும் தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் பலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். அதில் அண்ணா பல்கலை கழக எம்.எஸ்.சி மாணவன் சந்தோஷ் (22) மிகவும் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணமடைந்தார்.

ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கப் போவதாக பீற்றிக்கொண்டு இப்போட்டியை நடத்தியவர்கள் தான் கல்வியினை வியாபாரப்பொருளாக மாற்றியவர்கள். இறந்த அந்த மாணவனை அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம், ஆனால் அந்த மருத்துவமனை தனியாருடையவை. அதற்கு பணம் செலுத்துவது யார்?

இப்படி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கிய அயோக்கியர்கள் தான் போட்டிக்கு கொடியசைத்தவர்கள். இதனை மக்கள் உணரும் நேரத்தில் இன்று கொடியசைத்தவர்கள் ஓடிக்கொண்டு இருப்பார்கள்.

தமிழக மின்சாரத் துறைக்கு மின்கட்டணம் செலுத்துவதை நிறுத்துவோம்! பிரச்சார இயக்கம்!!


Tuesday, September 9, 2008

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!
எந்தக் கவிதை நாம் பாட?
கண்ணில் தெரியும் பூக்களையா!
காலில் குத்தும் முட்களையா?
எந்த மரபை நாம் தேட?



மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
தரையில் நிழல்விழா தஞ்சைக் கோவில் அற்புதங்கள்
சூளகிரி இசைத் தூண்கள்.... புடைப்புச் சிற்பங்கள்
இப்படி மூளியாய் கிடக்கும் சிலைகளுக்கும்
முன்கதை ஒன்று இருக்கிறது.
ஆனால் கூலியாய் நிலம் பெயர்ந்து
பெங்களூரிலும், கல் குவாரியிலும்
பிய்த்து எறியப்படும் உழைக்கும் மக்களின்
கல்லாய்ச் சமைந்த வாழ்க்கையை
எழுப்புவதற்கான இலக்கியம் எங்கே?
குண்டு குண்டாய் இருக்கும்
கொழுப்பேறிய இலக்கியமெல்லாம்
சுரண்டுபவனின் நக அழுக்கை அல்லவா
விண்டு வைத்து விருந்து படைக்கிறது
கண்டதுண்டா! நீங்கள் கண்டதுண்டா!
நக்சல்பாரிகளின் துண்டறிக்கைகள் அல்லவா
நமது உழைக்கும் மக்களின் குரலை
உயர்த்திப் பிடிக்கிறது
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அல்லவா
மறுக்கப்பட்ட நம் இலக்கியம் இருக்கிறது!


தருமபுரிக்கு
ஆருயிர் நீட்டிக்கும்
அரும்சுவை நெல்லிக்கனியை
அதியமான் அவ்வையாருக்கு கொடுத்ததா பெருமை?
மக்களின் அரசியல் வாழ்வு நீடிக்க
தம் ஆருயிரையே கொடுத்த
எங்கள் அப்பு, பாலன் தந்த
நக்சல்பாரி பாதையல்லவா பெருமை!


தருமபுரி கரும்புக்கு
சருக்கரை விழுக்காடு அதிகமாம்!
இருக்காதா பின்னே,
கணுக்கணுவாய்
இனிய பாட்டாளி வர்க்கக் கனவுகளை
வேர் இறக்கிய
நக்சல்பாரிகள் மண்ணில்
நட்ட பயிராயிற்றே!


அரசாங்கம் அழகாய் கதைவிடுகிறது
ஈரமற்ற மண்...
சாரமற்ற கலிச்சோறு...
வேலையற்ற மக்கள்...
பின்தங்கிய மாவட்டமாதலால்...
பின்தங்கிய மனநிலையினால்
மக்கள் நக்சல்பாரிகள் ஆகிவிடுகிறார்களாம்!


மடையர்களா!
வேலை இல்லாதவனா புரட்சியாளன்
வெட்டி வேலை செய்பவன் போலீஸ்காரன்.
பின்தங்கிய மனநிலையா புரட்சி?
முன்னேறிய உணர்ச்சி அல்லவா புரட்சி!
முன்னேறிய அறிவு அல்லவா புரட்சி!
முன்னேறிய உழைப்பு அல்லவா நக்சல்பாரி!


கதை முடிக்கப் பார்ப்போரே!
அது முடியாது
நாங்கள் பகத்சிங்கின் தொடர்ச்சி.


சில குழந்தைகளுக்கு
பொம்மைகள் போதும்
அழுகையை நிறுத்திக் கொள்ள
சில குழந்தைகளுக்கோ
அம்மா வேண்டும்!
கிலு கிலுப்பைகளோடு அடங்கிவிடும்
சில குழந்தைகள்.
சில குழந்தைகளுக்கோ தாயின் குரல் வேண்டும்!
வயிறு நிறைந்தால்
தூங்கிவிடும் சில பிள்ளைகள்.
சில பிள்ளைகளுக்கோ அது முடியாது
அடுத்து கதை÷வண்டும்.
அவர்களுக்குச் சொல்லுங்கள்
இந்தக் கதையை...
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழõம் ஆண்டு
செப்டம்பர் இருபத்தி எட்டாம் நாள்
ஒரு பஞ்சாப் தாயின் பிரசவ வலி
புதிய இந்தியாவையே ஈன்றெடுத்தது.
கருவறையை விடவும் இருண்டு கிடக்கும்
நாட்டின் நிலைமையை
கர்ப்ப வெப்பத்திலேயே கண்டுணர்ந்து,
தன் மேனியில் வழிவது
தாயின் இரத்தம் மட்டுமல்ல
தாய்நாட்டின் இரத்தம் என்பதை
பார்த்து, பார்த்து
அடிமைத்தனத்தின் பனிக்குடம் உடைத்து
தொப்புள் கொடியின் தாமதம் அறுத்து
பிறப்பின் கலகம்
அங்கே பகத்சிங் என்று பெயரெடுத்தது.
அடிமை இந்தியாவின் தாலாட்டில்
அடங்க மறுத்து, அழுது சிவந்து
அவன் கையும் காலும்
எல்லோர் முகத்திலும் எட்டி உதைத்தது.


வெறும் வயிற்றுப் பசிக்காக
வளர்ந்தவனாய் இருந்திருந்தால்
அம்மா... அப்பா என்று மட்டும்
அழைத்திருப்பான்.
வர்க்கப் பசியோடு வளர்ந்த பகத்சிங்
அ... ம்.... மா, அ... ப்... பா... நாடு என
விரிந்த பொருளில்
பேசத் தொடங்கினான்.


பன்னிரெண்டாம் அகவையில்
பள்ளிக்கூடத்திலிருந்து
யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்
துள்ளியெழுந்து
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை
பார்க்கப் போனான்.
அங்கே வெள்ளையன் குதறிய
இந்தியப் பிணங்களை
தன் கண்களில் விதைத்தான்.
கருகிய இரத்தம் இதயத்தில் உறைய
தன் காலத்தை வெறுத்தான்.
சிவந்து கிடக்கும் இந்தியக் கனவையும்
சிதறிக் கிடக்கும் இந்தியப் புரட்சியையும்
ஒன்று சேர்க்கும் உறுதியுடன்
கையில் அள்ளிய களத்தின் மண்ணை
தன் (சட்டைப்) பையில் திணித்தான்!


மண்ணைத் தின்று வளர்ந்தவர்களே!
உங்களில் எத்தனை பேருக்கு
இந்த மண்ணைப் பற்றிய அக்கறை உண்டு?
ணூ வெறும் வீட்டுப் பாடம் போதுமா?
பகத்சிங் போல நாட்டுப்பாடம் படித்தாலே
நல்ல புத்தி வந்து சேரும்.
இல்லையேல்
ஜாலியனாவது... பாக்காவது
அமெரிக்காவின்
கூலி என் பாக்கியம் என்று
சட்டைப் பையில் மட்டுமல்ல
சதைக்குள்ளும் அந்நிய நரகலின்
ஆணவம் ஊரும்.


பகத்சிங்கும் தான் படித்தார்!
""புரட்சி ஒன்றே என் விருப்பப் பாடம்
நாட்டுப்பற்றே உயர்நிலைக் கல்வி
கம்யூனிசமே உயிரியல் படிப்பு''
என்ற விடுதலைக் கல்வியின் வீரியத்தை
விளக்கிச் சொல்லுங்கள் பிள்ளைகளிடம்.
சுயநலம் என்ற தோல் வியாதி
உங்கள் பரம்பரைக்கே தொற்றாது.
"இளமைக்கேற்றவேலை வாய்ப்பு
இந்தியப் புரட்சியில் இருக்குது
அந்நியன் ஆதிக்கம் ஒழிப்பதிலேயே
நம் அனைவர் நலனும் பிறக்குது''
என்று பகத்சிங் சொன்ன கருத்துக்களோடு
பழக விடுங்கள் பிள்ளைகளை.
முதலாளித்துவம் எனும் கெட்ட பழக்கம்
உங்கள் வாரிசுகளுக்கே வராது.
எனக்கு மட்டுமே வாழ்வேன் என்று
இதயத்தை இழுத்து நடக்கும்
"வாதம்' அவர்களுக்கு வராது!
போராடத் தூண்டும் பகத்சிங் வாழ்வு!
பொறாமைப்பட வைக்கும் அவன் சாவு!
கரைக்கப்பட்ட பகத்சிங் சாம்பலால்
உணர்ச்சி பெற்ற சட்லெஜ் நதி இன்றோ...
சகலரையும் சந்தேகத்துடனே பார்க்கிறது.
எதுவுமே செய்ய முன்வராத
இவர்களை நம்பியா செத்தோம்
அச்சத்தில் தியாகிகள் கனவு உறைகிறது!
இவர்களை நம்பியா இருக்கிறோம்
பீதியில் இயற்கை நடுங்கித் தவிக்கிறது!


சும்மா பகத்சிங் பற்றி பேசாதே!
அவன் பேசவிரும்பியதைப் பேசு
சும்மா தியாகிகள் இரத்தத்தில் ஒளியாதே!
அவர்கள் தெரிவு செய்த பாதைக்கு
வேலை செய்ய வெளியே வா!
அழைக்கிறது புரட்சி நதி!



(29.9.2006 அன்று தருமபுரி பெண்ணாகரத்தில் நடைபெற்ற பகத்சிங் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் - கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

துரை சண்முகம்
இணைப்பு