Saturday, July 12, 2008

கல்விக் கடவுள் டில்லி பாபு!

கல்விக் கடவுள் சரசுவதி
கையிலிருக்கும்
வீணையை எறிந்து
வெகுநாளாயிற்று
எடை மிசினை ஏந்தியபடி
எதிர்பார்த்திருக்கிறான்
பக்தர்களை.

மெனக்கெட்டுப் படித்து
நல்ல மதிப்பெண் வாங்கிய
பையனை
பணக்கட்டு ஏதுமின்றி
பள்ளிப்படியிலேற்றினார்
சுமைதூக்கும் தொழிலாளி
டில்லிபாபு.

பத்தாயிரம்
நன்கொடை தந்தால்
பதினோராம் வகுப்பு
கிடைக்குமென்று
கட்டாயமாகச் சொன்னார்
பள்ளி நிர்வாகி
ஆலேசமடைந்த தொழிலாளியை
ஆற்றுப்படுத்தினர்
சில ஆசிரியர்கள்.

இங்காவது இத்தோடு,
மற்ற இடத்தில்
அதுக்கு இதுக்கு என்று
பணத்தைப் பறிப்பான்
கொத்தோடு!
கூட்டிக் கழித்துப்பார்!
பேசாமல்
கேட்டதைக் கொடுத்து
பிள்ளையைச் சேர்!
என்று
கணக்கு வாத்தியார்
புரியவைத்தார்.

கஷ்டப்பட்டு விதைச்சாதான்
இஷ்டப்பட்ட விளைச்சல் வரும்!
பருவத்தே பயிர் செய்ய
பணத்தைப் பார்க்காதே!
என்று
புத்தி சொன்னார்
புவியியல் ஆசிரியர்.

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு -
அதுபோல
ஒவ்வொரு படிப்புக்கும்
ஒரு விலை உண்டு
என்ன நீ இது புரியாம இருக்க?
என்று
எரிச்சலடைந்தார்
அறிவியல் ஆசிரியர்.

தன்மையோடு இடைமறித்தார்
தமிழாசிரியர்;
உயிரும் மெய்யும் சேர்ந்தாதன்
உயிரமெய்யெழுத்து
அதுபோல-
பணமும் படிப்பும் சேர்ந்தால்தான்
பளபளப்பு
பணத்துக்காக
நல்ல பள்ளியை விட்டால்
அப்புறம்
உன் பையனின் தலையெழுத்து?

எதற்கும் சம்மதிக்காத
தொழிலாளியைப் பார்த்து
"நீ போய்யா வெளியிலே" என்று
வெறுப்புடன்
சத்தம் போட்டார் நிர்வாகி.
பதிலுக்கு
"இதாண்டா ஆயுத எழுத்து"
என்று
சுமைதூக்கும் கொக்கியால்
தலையில் எழுத..
இரத்த வெள்ளத்தில்
நிர்வாகி.
கைதாகி, வழக்கில்
தொழிலாளி.

இப்போது-
கட்டாய நன்கொடை
பள்ளியில் இரத்து.
கல்விக் கபாலத்தை
திறந்து விட்ட
டில்லி பாபுவை
கையெடுத்துக் கும்பிடுகிறது ஊர்.

-துரை.சண்முகம்

'கட்டாய நன்கொடை கேட்ட பள்ளி நிர்வாகியைத் தாக்கிய தொழிலாளி கைது' என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை.


நன்றி : புதிய கலாச்சாரம் ஜுலை 2008

No comments:

இணைப்பு