சீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வலது மற்றும் இடது திசை விலகல்களுக்கெதிராக தன்னைப் புனரமைக்க பெருமுயற்சி செய்து வந்தது. இந்தப் பிண்ணனியில், வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் புடம் போடப்படுவதற்கு முன்வந்த சீன இளைஞர்களின் வரலாற்றுச் சித்திரமே இந்நாவல்.
1931 இல் சீனாவின் வடகிழக்கு மாநிலங்களை ஜப்பான் ஆக்கிரமித்தது. அப்போது சீனாவை ஆண்டு கொண்டிருந்த சியாங்கே ஷேக் எனும் பிற்போக்கு ஆட்சியாளன், ஜப்பானுடனான போரில் தோல்வியடைந்து பின்வாங்கினான். தேசத்தைச் சூழ்ந்திருந்த இவ்விரண்டு அபாயங்களையும் எதிர்த்து, தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் போராடினார்கள். இதன் முத்தாய்ப்பாக, கம்யூனிஸ்ட் கட்சி 1935 டிசம்பர் 16இல் பீகிங் நகரத்தில் மாபெரும் அரசியல் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசியல் அரங்கிலும், கட்சியின் தளத்திலும், தனி மனிதர்களுக்குள்ளேயும் நடந்த போராட்டங்களின் உயிர்த் துடிப்பான பதிவே இந்நாவல். இப்போராட்டங்களினூடாக, மனித குலம் இதுவரை கண்டும், கேட்டும் இராத, உயர்ந்த, பண்பட்ட வார்ப்புகளாக பல கம்யூனிஸ்ட்டுகள் உருவானதன் இரத்தமும், தசையுமான வரலாறு இது.
கதையின் நாயகர்கள் எவரும், "பிறவி நாயகர்கள்' அல்ல; காலத்தை எதிர்கொண்ட விதத்தினாலேயே நாயகர்களாக மாறியவர்கள்; புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு கண்ணியாக தங்களை நிலைநிறுத்தியதன் மூலம், நாயகர்களாக உயர்த்தப்பட்டவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிமுகமாகும் நிலப்பிரபுத்துவ பின்னணி, சிறு முதலாளியப் பின்னணி, அறிவு ஜீவிகள், ஆலைத் தொழிலாளிகள், கூலி விவசாயிகள், சிறு உடமையாளர்கள் போன்ற பல வர்க்கத்தினரும், பாட்டாளி வர்க்கமாக பட்டை தீட்டப் பட, சமூக நடைமுறை வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதில் அவர்களது தடுமாற்றம்; அதனைக் களைவதற்கான போராட்டம்; போராட்டத்தில் வெற்றி, தோல்வி; மீண்டும் போராடுவது ... என இவர்களது அரசியல் போராட்ட வாழ்க்கை நீள்கிறது; வழிதவறிப் போனவர்களும் இதில் உண்டு.
கார்க்கியின் "தாய்' நாவல், ஒரு அரசியலற்ற தாயின் சமூக அக்கறையினூடாக, அவள் அரசியல்படுத்தப்படுவதை விளக்குகிறது. யாங்மோவின் "இளமையின் கீதமோ', ஒரு பிற்போக்கு நிலவுடமைச் சமூகத்தின், ஆசை நாயகி ஒருத்தியின் மகளான டாவோசிங்கின் எளிய தேசப்பற்று, அவளைக் கம்யூனிஸ்ட் கட்சி தோழராக மாற்றிய வரலாற்றுக் கட்டத்தையே விளக்குகிறது எனலாம்.
கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்து, கிராமப்புற பள்ளி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள் டாவோசிங். ஒரு நிலப்பிரபுவிற்கு ஆசை நாயகியாக அவளை மாற்றத் துடிக்கும் உறவினர்களை எதிர்த்துக் கொண்டு, அவளைக் காதலிக்கிறான் பல்கலைக் கழக மாணவனான யூ யூங்சே. அவனுடன் நகரத்திற்கு வந்த பிறகு, ஒரு புத்தாண்டு விருந்தில் அவளுக்கு கம்யூனிச அறிமுகம் கிடைக்கிறது. லூ சியாசுவான் என்ற தோழர் அவளுக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.
அதன் பிறகு கட்சிக்காக ஆசிரியராகிறாள்; கிராமங்களுக்கு செல்கிறாள்; உளவாளியாகச் செயல்படுகிறாள்; அடக்குமுறைக் காலங்களில் அஞ்சாமல் வேலை செய்கிறாள்; கைதாகி சிறைப்படுகிறாள்; இறுதியில் டிசம்பர் 16 ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுகிறாள். ஒரு எளிமையான கிராமத்துப் பெண் படிப்படியாக போராளியாக மாற்றப்படுவதன் தருணங்களை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. கூடவே பல தோழர்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கைகளையும் அறிகிறோம்.
கோமிண்டாங் போலீசிடம் பிடிபட்ட லூ சியாசுவான், தன் மீதான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு, பிற தோழர்களுக்கு ஆபத்து எனத் தெரிந்தவுடன் துடித்துப் போய், கட்சிக்கு தகவல் அனுப்ப முயல்கிறார். அவர் மடிந்தாலும், தோழர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். லீவெய் என்ற தோழர், உற்சாகத்துடன் விளையாடச் செல்லும் விளையாட்டு வீரனைப் போல மற்றவர்களிடம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, கைகுலுக்கி விட்டு, தூக்குமேடைக்குச் செல்கிறார்.
புரட்சிகர இயக்கமோ கம்யூனிசமோ, பலருக்கு இது போன்ற பரவசமூட்டும் தருணங்களில்தான் அறிமுகமாகிறது. இந்நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சிலர். பலருக்கு இத்தியாகம், நம்பிக்கையூட்டி கிளர்ச்சியூட்டுகிறது. வாசகர்களுக்கு இந்த எழுச்சி உணர்வு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், அவர்கள் தம்மை கதாபாத்திரமாக மாற்ற வேண்டியுள்ளது. அதாவது புரட்சிகர நடைமுறையில் இறங்க வேண்டியுள்ளது.
புதிய ஜனநாயகப் புரட்சிதான் தீர்வு என்பதை ஏற்றுக் கொண்டாலும், இன்றைய சமூக அமைப்பு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தான்மட்டும் தப்பித்துக் கொள்ளலாம், எனக் கருதுபவர்கள் இன்று மட்டுமல்ல, அன்றைய சீனத்திலும் இருந்தார்கள். நடுத்தர வர்க்கத்தின் இத்தகைய சிந்தனைக்கு நாவலில் வகை மாதிரியாக வருபவன் சூநிங். இந்த அநீதியான பறிக்கப்பட்ட வாய்ப்புக்களை உதறிவிட்டு கம்யூனிஸ்ட்டாக மாறுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக அவனது நண்பனான லோ டாஃபாங்கைக் கூறலாம்.
தாயின் பாசம், காதல், படிப்பு ஆகியவற்றுக்காக செஞ்சேனைக்கு செல்லும் தனது முடிவிலிருந்து பின் வாங்குகிறார் சூநிங். அவனது நண்பனும், கட்சித் தோழனுமான லோ டாஃபாங், ஒரு நிலப்பிரபுவின் மகன்; அவனது தந்தை நான்கிங் நகரத்தில் அரச பதவிக்கு வர இருக்கிறார்; இந்நிலையில் கட்சி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. மற்றவர்களை அணிதிரட்டும் சூநிங், தான் மட்டும் கலந்து கொள்ளாமல் நழுவுகிறான். தலைமறைவாக இருக்க வேண்டிய லோ டாஃபாங் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பெண் தோழர்களைக் காப்பதற்காகக் களத்தில் இறங்கிச் சண்டையிடுகிறான். பின்பு வட கிழக்குப் போர்முனைக்கும் விரைகிறான். இருவரும் நண்பர்கள்தான் என்றாலும், நடைமுறையில் தோழர்களாக செயல்படுவதில் வேறுபடுகிறார்கள்.
நடைமுறை வேலைகளில் தோய்த்துப் பார்க்காத எவரும் எவ்வளவுதான் மார்க்சிய லெனினியத்தைக் கற்றுத் தேர்ந்தாலும் அற்பக் காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகத்தான் நேரிடும். அவர்கள் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையைத் தீர்மானிக்க உதவும் சித்தாந்தத்தை, தமது சுயநலனுக்காக கைவிடுவார்கள். அவர்கள் தலைவர்களாக அமையும் போது, தமது தவறையே ஒரு சித்தாந்தமாக நியாயப்படுத்துகின்றனர். மேல் கமிட்டி தோழராக வரும் தய் யூ அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சாகசவாதத்தை முன்வைத்த லிலிசான் பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர். ஆரம்பத்தில் சாகசவாதத்தை கிளர்ச்சியூட்டும் முறையில் பேசுபவர், இறுதியில் எதிரியின் உபசரிப்பில் மயங்கி கட்சிக்குத் துரோகமிழைக்கிறார். ஒரே மூச்சில் புரட்சி, இல்லையேல் வீழ்ச்சி என்று இரு கடைக் கோடிகளுக்கும் செல்லும் இவர்களைத்தான், இடது சந்தர்ப்பவாதிகள் என்று லெனின் அழைக்கிறார்.
முப்பதுகளில் சில மாதங்களே தலைமையில் இருந்த லிலிசான் சாகசப் பிரிவைப் பரிசீலித்து, விமர்சிக்கத் தவறியதால், கோமிண்டாங் அரசு கட்டவிழ்த்து விட்ட வெள்ளைப் பயங்கரவாதத்திற்கு கட்சி ஆட்பட நேர்ந்தது. இதனால் "நெடும் பயணம்' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்ட இடப்பெயர்வின் மூலம், கட்சி தனது மிச்சமிருக்கும் உறுப்பினர்களைக் காப்பாற்றியது. நெடும் பயணத்தின் மத்தியில் 1935 ஜனவரியில் நடந்த சுன்யீ மாநாட்டில் கட்சி தனது தவறான பாதை குறித்து சுயவிமரிசனம் செய்து கொண்டது. பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியே தன்னை சுயவிமரிசனம் செய்து கொள்ளும் போது, தனிப்பட்ட அறிவாளிகளோ தன்னை முன்னிறுத்தி தவறுகளை சுயவிமரிசனம் செய்ய மறுக்கின்றனர். முன்னாள் தோழரும் நடிகையாக மாறியவருமான பய் லீபிங் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.
""கம்யூனிசம்கிறது கெட்ட விஷயமில்ல; தத்துவ ரீதியா அது ரொம்ப தெளிவில்லாதது; வெற்றியோ ரொம்ப தூரத்தில் இருக்குது... அது தவிர நீ கைது செய்யப்படலாம்; உன்னோட தலை துண்டிக்கப்படலாம்கிற அபாயத்துல எப்பவும் இருக்க! இதிலிருந்து தப்பிக்க ஒனக்கு ஓரளவு அதிர்ஷ்டம் இருந்தாலும், கடுமையான ஒழுக்கத்தோட இருக்கணும்; நிபந்தனையில்லாம தலைமைக்குக் கட்டுப்படணும்; அதனாலதான் நான் அதிலிருந்தெல்லாம் வெளியேறிட்டேன்'' என டாவோசிங்கிடம் "அறிவுரை' கூறுவாள் பய் லீபிங். காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் என்று பல்வேறு பெயர்களில் இருக்கும் தனது சொந்த வாழ்க்கை சுயநலங்களைப் புனிதப்படுத்துவதற்கு, முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் வைக்கும் இவ்வுலகளாவிய வாதத்தை தமிழகத்தின் பல அறிவு ஜீவிகளிடமும் காண்கிறோம். சுயநலத்திற்கு தேசப் பிரிவினை ஏது?
பய் லீபிங் மீதான காதல்தான் சூநிங்கை செஞ்சேனைக்கு செல்வதிலிருந்து விலக வைத்தது. அன்று மாலையே கோமிண்டாங் இராணுவம் அவனைக் கைது செய்துவிடும். சிறை வாழ்வும், அங்கு கண்டறிந்த தோழர்களின் அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் அவனைத் தோழராகப் பட்டை தீட்டுகிறது. சுயநலம் மிகுந்த பய் லீபிங்கின் அழகை விட, அனைவருக்கும் விடுதலையைத் தரப்போகும் கம்யூனிசத்தின் அழகு, அவனை செஞ்சேனையில் கொண்டு சேர்ப்பதற்குக் காரணமாக அமைகிறது.
நிலப்பிரபுக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் யூ யூங்சேவை முதலில் காதலிக்கிறாள் டாவோசிங். இந்த முதல் செயலுக்கு மேல், அவனது முற்போக்கு முடிந்து விடுகிறது. கட்சியில் சேர்ந்து தோழராக வேலை செய்யும் டாவோசிங்கை முதலில் நாசூக்காகவும், பின்பு நேரடியாகவும் கண்டிக்கிறான் யூ யூங்சே. இதற்கு மேல் இங்கு காதலுக்கு இடமில்லை என்பதால், அவனை விட்டு விலகுகிறாள் டாவோசிங். இதே போல தய்யூ ஒரு துரோகி எனத் தெரிந்தவுடன் அவனுடனான காதலைத் துறக்கிறாள் டாவோசிங்கின் தோழியான சியாவோயென்.
இப்படித்தான் கம்யூனிஸ்டுகளின் காதலில் சமூக உணர்வு மட்டுமே அளவு கோலாகிறது. வேறெந்த சித்தாந்தங்களை வைத்திருப்பவர்கள் எவரும், இப்படிக் குடும்ப வாழ்வில் முரண்படுவதில்லை. தோழர்கள் மட்டும்தான், தனது சமூக விழுமியங்களை குடும்பத்திலும் கொண்டு வரப் போராடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் "மகிழ்ச்சியான' குடும்ப வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் ஊரையும் வீட்டையும் திருத்தும் இத்தகைய போராட்டங்களில்தான், அவர்களது உண்மையான மகிழ்ச்சி வெளிப்படுகிறது.
தனது மனைவி டாவோசிங் தோழராக மாறியதால், தனது குடும்பத்தின் இன்பம் மறைந்து விட்டதாக யூ யூங்சே, தனது நண்பனான லூ சியாசுவான் எனும் கட்சித் தோழருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை: ""சில கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததன் மூலம் என் மனைவியின் மனதை நீ ரொம்பவும் கெடுத்து விட்டிருப்பதை நான் காண்கிறேன். அவள் உனது ஆணைப்படியே செயல்படுகிறாள். எப்போது பார்த்தாலும் ""புரட்சி'', ""போராட்டம்'' என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறாள். மிக மோசமான முறையில் எங்கள் குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டது. நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துன்பத்தில் நீ இன்பம் காண்பதும், எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்தத்தக்கது.... ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநெறி இருக்க வேண்டும்....''.
யூ யூங்சேயைப் பிரிந்து தோழராக வேலை செய்யும் டாவோ சிங்கிற்கு லூ சியாசுவானின் தோழமையுடன் கூடிய ஆளுமை, ஒரு மெல்லிய காதலைத் தோற்றுவிக்கிறது. மரணத்திற்கு முந்தைய சிறைக் கொட்டடியில் இருக்கும் லூ சியாசுவான், டாவோசிங்கிற்கு கடிதம் எழுதுகிறார். ""கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்த போது உலகின் மிக முன்னேறிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாய் தோழரே. வெற்றியின் நேரத்தை விரைவுபடுத்துவதற்காக, ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்டுகள் இரத்தம் சிந்துகிறார்கள்; உயிர்த்தியாகம் செய்கிறார்கள். .... அன்புத் தோழரே, அன்பு டாவோசிங், எனது முறை விரைவிலே வரக்கூடும்...''
இரண்டு கடிதங்களுக்குமிடையில்தான் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தில் எவ்வளவு வேறுபாடுகள்! தேசத்தின் விடுதலைக்கான முயற்சியால் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி மறைந்து விட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இன்னொரு கடிதமோ தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி போராட்டத்தை தொடர்ந்து செய்யவேண்டும் என்று கம்பீரமாக விரும்புகிறது. மக்களது விடுதலை என்ற எதிர்காலக் கனவுக்காக, நிகழ்காலத்தின் துயரங்களை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள், மனித வாழ்க்கையின் முழுமையைத் தங்களது வாழ்க்கையில் அடைகிறார்கள்.
""இருளைவிட ஒளி வலிமையானது; அற்ப குணத்தை விட பெருந்தன்மை வலுவானது; சுயநலத்தை பொதுநலமும், துயரத்தை மகிழ்ச்சியும் வெற்றி கொள்ள வேண்டும். உண்மையான மனிதனாக நாம் வாழவேண்டும். இதையே நான் எனது எழுத்தில் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்'', எனத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாவலாசிரியர் யாங் மோ. ஆம், முற்போக்கு, மக்கள் நலன், சமூக அக்கறை, மாற்றம், புரட்சி எனப் பேசுபவர்களைத் தொட்டுத் துரத்தும் முதற்புள்ளி இதுதான். அதுதான் இந்நாவலின் எளிய மாந்தர்களைக்கூட மாபெரும் நிகழ்வுகளைச் சாதிக்கும் போராளிகளாக மாற்றியிருக்கிறது.
தனிநபர்களின் வழியாகவோ அல்லது எந்திரகதியிலான விவரங்கள் அடிப்படையிலோ வரலாற்றை படிக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாவலோ ஒரு உயிர்த்துடிப்பான வரலாற்றுப் பின்னணியில், பல்வேறு வர்க்கப் பின்னணியிலிருந்தும் வரும் மனிதர்களை வைத்து, மனித வாழ்க்கையின் மாறத்துடிக்கும் போராட்டத்தின் காட்சியை ஒரு மாபெரும் ஓவியமாக தீட்டுகிறது.
இந்த ஓவியத்தில் மூழ்கி எழும்போது நாவலின் பாத்திரங்கள் கடந்த காலத்திற்கு மாத்திரம் உரியவர்கள் அல்ல, நிகழ் காலத்தில் நம்மிடையேயும், நமக்குள்ளேயும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது தெரிய வருகிறது. 748 பக்கங்களில் விரியும் நாவலைப் படித்து முடித்ததும், நாமும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து வேலை செய்ய மாட்டோமா என்ற ஆவலும் புதிய வாசகருக்கு நிச்சயம் எழும். தோழர்களுக்கோ புரட்சியின் உரைகல்லில் நாம் எங்கு, யாராக, என்னவாக நிற்கிறோம் என்ற நிலைக்கண்ணாடி போல நாவல் காட்டிவிடும்.
"புரட்சி சரியானது; மக்களை அணிதிரட்டவேண்டும்; நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால், எனது பிரச்சினை தனியானது. நான் மட்டும் பிழைத்துக் கொள்வேன்; எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும்; மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான்' எனக் கருதுவதற்கான வாய்ப்பை அன்றைய சீனத்திலும், இன்றைய இந்தியாவிலும் ரத்து செய்கிறது நாவல்.
·வசந்தன்
புதிய கலாச்சாரம்