Monday, November 24, 2008

ஆதிக்க சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடு!




உலகத்தை விடிய வைத்தது நீதானடா

உலகத்தை விடிய வைத்தது நீதானடா
உன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா
நீயின்றி உலகம் இல்லையே
வானமே உனது எல்லையே
உனக்கென்று ஏதும் இல்லையே....
(உலகத்தை)
..
இடி மின்னல் மழையானாலும்
தளறாது உந்தன் கைகள்
குளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்
உனது வியர்வை அனையை மீறுமே
உயிர் பெறும் மின்சாரமே
நரம்பில் ஓடும் இரத்தம் போலவே
சிதறிபாயும் பூமியாவுமே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
ஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்
உருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்
கடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே
வலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
நிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்
நெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்
உனது உடல் இழையாய் வேகும்
உலகமே பகலாய் மாறும்
உனது விழி ஒரு நொடி மூடும்
உலகமே ஒளியைத் தேடும்
உனக்கென்று ஏதும் இல்லையே
(உலகத்தை)


Saturday, November 15, 2008

நாம் என்ன செய்யப் போகிறோம்!

நவம்பர்‍‍‍‍-7,2008
ரஷ்யப் புரட்சியின்
91-வது ஆண்டு்விழா!
..
உள்ளமெங்கும்
மகிழ்ச்சி ததும்பி
அரங்கமெங்கும்
நிரம்பி வழிந்த
குழந்தைகளின்
குதூகலமும்
அரங்க நிகழ்வுகளும்

ரஷ்யாவைப்போல்
இங்கோர்
புரட்சி நிகழ்ந்து விட்டதாய்
என்னும்படியாக
எதிர் காலத்திற்கே
இட்டுச்சென்றது
என்னை!

குறையேதும்
காணுமுடியாத
குழந்தைகளின்
அரங்கேற்றத்தில்...

தொழில்முறை கலைஞனின்
செய்நேர்த்தி கொண்ட
இசைச்சித்திரக்குழு
மாணவர்களின்
திறமையில்...

மனதை வருடும்
இசையில்
பாரதிதாசனின்
தாலாட்டுப்பாடல்-தந்த
பரவசத்தில்...

"எங்கிருந்து
ஒலிக்கிறது இந்தக்குரல்"-
வினாயெழுப்பி
வியக்கவைத்த
அந்தக் கிழட்டு
இளைஞனின்
கம்பீர குரலின்
பிரமிப்பில்...

மொத்த நிகழ்வும்
தந்த போதையில்
இலயித்துப்போன
என்னை...

நிகழ்காலத்துக்கு
என்'காலத்'துக்கு
இழுத்து வந்தது
"இப்படியிருந்தால்
எப்படி வரும் புரட்சி?"-
உரைவீச்சு.

இமை மூடி
செவி பொத்திய போதும்

"என்னால்
இவ்வளவுதான் தோழர் முடியும்..."

"கொஞ்சம்
குடும்பத்துல பிரச்சிணை..."

"பொதுநிகழ்ச்சிக்கு வார்ரேன்
நன்கொடை தார்ரேன்
அதுக்கு மேல..."

இன்னும் பல விதமாய்...

செவுளில்
மோதிச் சென்றன...

இன்று காலை வரை
நான் சொல்லி வந்த
அற்ப காரணங்கள்!

"எப்படிங்க
இருந்தது நிகழ்ச்சி?"-
தோழரின் கேள்வி...

செவியில் நுழைந்து
மனதை குடைந்து
என்னுள்
எதிரொலித்துக்
கொண்டேயிருக்கிறது...

புரட்சிக்காக
"நாம்
என்ன செய்யப் போகிறோம்?"என்று!

_ இளங்கதிர்.

Saturday, November 1, 2008

எது பிரெய்ன்வாஷ் - குட்டிக் கதை!

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.

"என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே! நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே! எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க!.. இத விரும்பி படிப்பீங்க போல?"

"ஆமாம். உண்மையைத்தானே சொல்றாங்க! நீங்க படிப்பீங்களா?"

"படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க மாட்டேன். ரெகுலரா படிச்சோம்னு வச்சிக்குங்க .. அப்படியே நம்மள பிரெய்ன்வாஷ் பண்ணிடுவாங்க!"

"அது என்னங்க.. துணி வாஷ் மாதிரி, பிரெய்ன்வாஷ். அழுக்கா இருந்தா சலவைக்குப் போட வேண்டியதுதானே!"

"ஐ மீன்.. பிரெய்ன்வாஷ்னா.. எதையாவது ஒன்னச் சொல்லி அவங்க சொல்றதுதான் சரின்னு ஆக்கிடுவாங்க.. நம்மள அவங்க பக்கம் இழுத்துடுவாங்க .. புரியுதா!"

"எங்கயும் போயிடாதீங்க, தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கன்னு டி.வி.யுலயும்.. ஏன் உங்க மருந்துக் கம்பெனி முதலாளி வரைக்கும் எதையாவது சொல்லி, பொருளை விக்கறதுக்காக அவங்க பக்கம் நம்மள இழுக்கும்போது.. இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறணும்னு தொழிலாளிங்க கருத்துச் சொன்னா அது தப்பா?"

"உடனே தொழிலாளி முதலாளின்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க.. மனுசன இயல்பா ஃபீல் பண்ணவுடணும் பாஸ்! சும்மா எப்ப பாத்தாலும் 'அவன் ஒழிக! இவன் ஒழிக! புரட்சி'ன்னு பேசி பப்ளிக்கை டெர்ரர்ராக்கி .. லைப்ல ஒரு ஜாலியே இல்லாம .. வேஸ்டாயிடும் !"

"உழைக்குற எல்லாரும் அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி 'இயல்பா' பணத்தை எடுத்துக்க முதலாளி விடுவானா? தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே! இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா?"

"பாத்தீங்களா! மெல்ல மெல்லப் பேசி .. என்னையே பிரெய்ன்வாஷ் பண்ணிடுவீங்க .. இதான் கம்யூனிஸ்டு வேலையே!"

"ஏன் நீங்க செய்யலையா? ஏற்கனவேதான் டாக்டர் மருந்து எழுதிக்கிட்டு இருக்காரே! அவரை இயல்பா இருக்கவுடறீங்களா? உங்க கம்பெனி மருந்துகளைக் காட்டி, அதப் பத்தியே பேசிப் பேசி டாக்டரை ஏன் பிரெய்ன்வாஷ் பண்றீங்க? நீங்க முதலாளிக்காகபிரெய்ன்வாஷ் பண்ணலாம்! தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது!? இல்ல!"

"பாஸ்.. என்ன புரிஞ்சுக்காம பேசுறீங்க? இது அட்வான்ஸ்ட் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸ்டா க்யூர் பண்ணுது! இது தேவை இல்லையா? என்ன சயின்சும் வேணாம்பீங்க போல.."

"அறிவியல் வேண்டாம்னு சொல்லலை.. அதைப் பண்டமாக்கி விக்கிறீங்க நீங்க.. அதை சமூக மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்ங்குறோம் நாங்க. இப்ப இருக்குற தனியுடமை, சுரண்டல், சாதி மத ஆதிக்க நோய்களுக்கு, அதை விரட்ட 'அட்வான்ஸ்டா' அரசியல் மட்டும் கூடாதா? அதச் சொன்னா பிரெய்ன்வாஷா!"

"இதாங்க.. உங்கள மாதிரி ஆளுங்க.. அது அதுக்கு ஒரு பதில் சொல்வீங்க.. பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.. ஏன் நெகட்டிவாவே யோசிக்கிறீங்க.. சும்மா குறையை மட்டுமே பாக்குறீங்க.. எவ்வளவு மாடர்னா லைஃப் வந்துருக்கு.. சயின்ஸ், மருந்து, டெக்னாலஜி.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு! நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ்! இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க ..? இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா?"

"சில பேருக்கு நீங்க சொன்ன எல்லா வசதியும் ஏன் இல்லாமல் இருக்குன்னு யோசிக்கறதுக்குப் பதில், இல்லாததைப் பத்திப் பேசுறதே தப்புங்குறீங்களே! இது வயலன்ஸ் இல்லையா? உங்க கருத்துப்படி சயின்ஸ் முன்னேறிய இந்த நாட்டில் வறுமை காரணமாகப் பெத்த பிள்ளைகளைக் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள் ஒரு தாய். நீங்க சொன்னபடி டெக்னாலஜி முன்னேறிய இந்த நாட்டில் இன்னும் மனித மலத்தைக் கையால் அள்ளும்படி வேலை வாங்கப்படறாங்க தாழ்த்தப்பட்ட தொழிலாளிங்க.. இப்படி ஒரு பகுதி உண்மை நிலவரத்தை மறச்சிட்டு நாடு பொதுவா முன்னேறி எங்கோ போயிட்டிருக்குன்னு நீங்க பேசறதுதான், அடுத்தவங்க மேல கருத்தைத் திணிக்கறது, அதுவும் தப்புத் தப்பா!"

"பாத்தீங்களா! நான் சொன்ன மாதிரி இதுபோல பத்திரிக்கைகளைப் படிச்சுப் படிச்சு நீங்களும் அதுவாவே மாறிட்டீங்க! இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ்! தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும்! சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் ரீட் இட் அண்ட லீவ் இட்..!"

"இப்ப நீங்க பேசறது ஒரு சித்தாந்தம் இல்லையா? உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க..? நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம்?"

"ஹலோ நீங்க ஆயிரம் சொல்லுங்க.. உங்கள மாதிரி பேசிக்கிட்டு இருக்குறவங்க ஊருக்கு ஒரு பத்துப் பேரு இருப்பீங்களா? எங்கள மாதிரி உள்ளவங்கதான் மெஜாரிட்டி.. இதுதான் பாஸ் யதார்த்தம்.. சும்மா ஏதாவது கற்பனையாப் பேசாதீங்க.. "

"நாட்ல மெஜாரிட்டி நோயாளிங்க; எய்ட்ஸ் பிரபலமா இருக்கு. அதுக்காக அதை ஆதரிக்க முடியுமா? நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு?"

"கருத்துன்னு கேட்டா.. நீங்க ஏத்துக்க மாட்டீங்க.. பட் பல இடத்துக்கும் போறதால ஐ நோ த ட்ரூத் வெரிவெல்,! இந்த புரட்சி அது இதெல்லாம் எடுபடாது.. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.. நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்."

"பாத்தீங்களா! ஜம்ப் ஆகுறீங்களே .. ஜனங்க இருக்கட்டும். நீங்க ஏத்துக்குறீங்களா.. இல்லையா..? அதச் சொல்லுங்க முதல்ல?"

"நோ.. நோ.. எனக்கு இந்த கம்யூனிசம்னாலே அலர்ஜி.. நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன். ஒருநாளும் கம்யூனிஸ்டா மாறவும் மாட்டேன்.."

"ஏன் மாறுனா என்னாகும்?"

"நான் ஏன் கம்யூனிஸ்டா மாறணும் .. எனக்குதான் எல்லா வசதியும் இருக்கே! ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் டு டேக் எனி ரிஸ்க்!"

"இப்பதாங்க உள்ளபடியே உங்கள சரியாக அறிமுகப்படுத்திட்டு உண்மையைப் பேசுறீங்க.. உங்க வர்க்கத்துக்கு கம்யூனிசம், புரட்சி தேவையில்லைங்குறதுக்காக.. அதை மத்தவங்களுக்கும் தேவை இல்லைன்னு பேச்சுவாக்குல பிரச்சாரம் பண்றீங்க பாருங்க.. இதுதான் பிரெய்ன்வாஷ்.. அடுத்தவங்க மேல கருத்தத் திணிக்கறது.. இப்ப புரியுதா!"

"என்ன டென்சனாயிட்டீங்க போல. விட மாட்டேங்குறீங்க.. வரட்டா!.. பிசினஸ் பாஸ்! டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா!"

"புரியுது.. புரியுது.. டார்கெட்டோடுதான் இருக்கீங்க .."

"ஓ! ஐ அண்டர்ஸ்டேண்ட்.. பட் ஐ டோண்ட் கேர். ஹா.. ஹா.. ஹா.."

வறட்டுச் சிரிப்புடன் நகர ஆரம்பித்தார்.. வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.

புதிய கலாச்சாரம், அக்'08 இதழிலிருந்து
இணைப்பு