சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.
சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.
சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். ""தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் '' என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
···
இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இலியானாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை. விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.
2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம். வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப் பையனும் இருக்கிறான் என்பதைப் பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.
···
···
ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள் ...இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு "மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்' பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?
வன்முறை கற்றுத்தரும்கார்ட்டூன் தொடர்கள்!
குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் இன்று தமிழிலேயே வந்து விட்டன. பள்ளிக் கல்விக்கு ஆங்கிலமும், பொழுது போக்குவதற்கு மட்டும் தமிழ் என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். குழந்தைகள் மனதை தாய்மொழியில்தான் கொள்ளை கொள்ள முடியும் என்பது அந்தச் சேனல்களைச் சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்குத் தெரியும்; சுட்டி டி.வி.யையும், தமிழ் ஜெட்டிக்ஸையும் சிறார்கள் நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பதற்காகவே விரும்பிக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே வீட்டுப் பாடத்தை விரைந்து முடிக்கிறார்கள். அவர்களது கற்பனை உலகை கார்ட்டூன்களும், யதார்த்த உலகை கார்ட்டூன்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களும் கட்டியமைக்கின்றன. ஆசை தோற்றுவிக்கும் ஏக்கத்திற்கும், அது நிறைவேற தடையாக இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த மாய உலகின் முரண்பாட்டில்தான் இளம்பருவத்து மாணவர்கள் உலவுகிறார்கள்.
பவர் ரேன்ஜர்ஸ் அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர்.
கிராபிக்ஸ் உதவியோடு வண்ணச் சிதறலாகத் தெறிக்கும் இத்தொடரில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது எல்லாம் நொடிக்கொரு தடவை நடக்கிறது. நமக்கு ஓரிரு நிமிடங்களில் சலித்துப் போகும் இத்தொடர், அவர்களுக்குச் சலிப்பதில்லை. கிராஃபிக்ஸ் இல்லாமல், நிஜத்தில் மாமிச மலைகள் மோதும் டபிள்யூ.டபிள்யூ. எஃப் மல்யுத்தச் சண்டைகளும் ஜெட்டிக்சில் காண்பிக்கப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இந்த வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
சக மனிதன் அடிபட்டாலோ, இரத்தம் சிந்தினாலோ, இறந்து போனாலோ அதிர்ச்சியடைவது மனித இயல்பு. சிறார்களின் உலகில், இந்த உள்ளார்ந்த மனித மதிப்பீடுகள் நமத்துப் போகின்றன. வன்முறை குறித்த இரக்கமோ, பயமோ இல்லாதது மட்டுமல்ல, அவர்களே அதைச் செயல்படுத்துபவர்களாகவும் மெல்ல மெல்ல மாறுகிறார்கள். அற்பப் பிரச்சினைகளாக இருந்தால் கூட, அதை வன்முறை மூலம் தீர்த்துக்கொண்டு இறுதி வெற்றி அடையவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். விளைவறியாத இளங்கன்றுகளாக இருப்பதால், இத்தகைய வன்முறை அவர்களது ஆளுமையின் அங்கமாகிறது.
விலங்குகளையும் இயற்கையையும் நேரில் கண்டு கற்கவேண்டிய வயதில், மிக்கி மவுசின் பொருளற்ற வேடிக்கைகளில் காலந்தள்ளுகிறார்கள் சிறார்கள். அதிலும் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன் தொடர்கள், இப்போது அருகி வருகின்றன. சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் அதிதீவிர வீரர்களின் தொடர்களே இன்று பெருகி வருகின்றன. இவற்றின் வன்முறைக்கு ஒத்திசைவான விதத்தில் இடையில் வரும் விளம்பரங்களும் குழந்தைகளைப் போட்டுத் தாக்குகின்றன. பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் மீது சலிப்பு வரலாம். சிறியவர்களுக்கு அவைதான் பாலபாடம்.
விளம்பர உலகில்வெதும்பும் சிறார்கள்!
சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் "மகிழ்ச்சியான குடும்பம்' உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பிஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.
சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.
வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.
""இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்'' என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய ""சரியான அணுகுமுறை. மாறாக ""இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி'', என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.
ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது, அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.
செல்பேசி இணையத்தில்சீரழியும் மாணவர்கள்!
சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.
ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.
சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது. இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.
விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித்தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை, இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக, பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.
எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும். இதனால் பாலியல் கல்வி வேண்டாம் என்பதல்ல. ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல. சொல்லப் போனால் மாணவப்பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?
வளரும் பருவத்தைவலிமையாக்கும் கட்டுப்பாடு!
அப்படி ஒரு கட்டுப்பாட்டை, அதாவது கல்லூரி வளாகத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்திய போது, பத்திரிக்கைகளும், முற்போக்கு முகாமும் ஆவேசத்துடன் அதனைக் கண்டித்தன. இது சுதந்திரத்துக்கும், தனிநபர் உரிமைக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று வாதிட்டார்கள். அமெரிக்க மாணவர்களிடையே வன்முறையை நிறுத்துவதற்கு துப்பாக்கி வியாபாரத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது, ஜனநாயக உரிமையின் பெயரால்தான் அது அங்கே நிராகரிக்கப்பட்டது.
இந்த வாதங்களில் ஒரு வெங்காய "உரிமை'யும் உண்மையில் இல்லையென்பது ஒருபுறமிருக்க, இந்த உலகமே கட்டுப்பாட்டில்தானே இயங்கி வருகிறது? ஒரு தொழிலாளிக்கு சீருடை அணிய வேண்டும், குறித்த நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில்தான் மதிய உணவு அருந்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இல்லையா? பல அலுவலகங்களிலும் செல்பேசியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களே, இதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? விதியின் பெயராலும், நடைமுறை ரீதியிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆயிரம் கட்டுப்பாடுகள் வைத்திருக்கும் முதலாளித்துவம், சமூகத்தில் சீரழிவுக் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு மட்டும் தனக்கு சுதந்திரத்தைக் கோருகிறது.
வீட்டிலும், பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான், வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். விடலைப்பருவ உளவியலின் காரணமாகப் பெற்றோருடனும், சூழலோடும் முரண்படுகிறார்கள். மாணவர்களின் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் இந்த உளவியல் வெளிப்பாடுகளை, மேற்கண்ட நச்சுக்கலாச்சாரம் ஊதிப் பெருக்குகிறது. இதனால் தனிமைப்படும் மாணவர்களைத்தான் வன்முறை எண்ணம் தின்று சீரணிக்கிறது. மாணவர்களை உடலுழைப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடுத்துவதுதான் இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழி. ஆனால் அந்தச் சூழல் நமது கல்வி முறையிலோ, பண்பாட்டிலோ இல்லை.
வளரும் சிறுவருக்குஉடலுழைப்பு அவசியம்!
இளம் மாணவர்களின் வயதினையொத்த சிறார்கள், நாடெங்கிலும் இலட்சக்கணக்கில் உதிரித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடை செய்ய வேண்டும் என இவர்களது வாழ்க்கை குறித்து கவலைப்படுவது தொண்டு நிறுவனங்களின் நாகரீகப் பணியாக இருக்கிறது. படிக்கவேண்டிய வயதில் இவர்களை இவ்வேலைகளுக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றமெனத் தொண்டு நிறுவனங்கள் சாதிக்கின்றன. உண்மையில் பணமில்லாதவனுக்கு எதுவுமில்லை என இந்தச் சமூக அமைப்பை மாற்றியஅரசும், ஆளும் வர்க்கங்களும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, இக்குழந்தைகள் விடலைப் பருவச் சேட்டைகளையோ, வன்முறைகளையோ செய்வதில்லை. தேநீர்க்கடைகளில் குவளை கழுவும் சிறுவனோ, ஓட்டலில் மேசை துடைக்கும் சிறுவனோ இத்தகைய வன்முறை வெறிக்குப் பலியாவதில்லை. சமூகத்துடன் யதார்த்தமான உறவில் இருக்கும் இச்சிறுவர்கள், பண்பையும் முதிர்ச்சியையும்தான் பழகிக் கொள்கின்றனர். வயதுக்கு மீறிய அதீத உழைப்புதான், இவர்களைப் பின்னாளில் உதிரிக் குணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. அப்போதும்கூட இவர்கள், சமூகத்தின் மீது வன்முறை செலுத்தும் மேட்டுக்குடிப் பொறுக்கிகளைப் போல மாறுவதில்லை.
ஆம். மாணவர்களை குறிப்பிட்ட அளவில் உடலுழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலமே, அவர்களது பருவப் பிரச்சினைகளைக் கடந்து ஒரு சமூக மனிதனாக வளர்க்க முடியும். கோடை விடுமுறையில் சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ, கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள். உடலுழைப்புடன் கூடிய சுயமதிப்புடன் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இச்சமூகத்தின் அங்கத்தினன் என்ற தகுதியைப் பெறமுடியும் என்பதைத் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.
ஆனால் நடுத்தர வர்க்கமோ தங்களது செல்வங்களை டென்னிசுக்கும், கணினிப் பயிற்சிக்கும், பாட்டு வகுப்பிற்கும் அனுப்பி நம்பர் 1 ஆக்குவதற்கு மட்டுமே மனப்பால் குடிக்கிறது. இது மாணவர்களுக்கு தனிநபர் வாதத்தையும், சுயநலத்தையும், காரியவாதத்தையும் கற்றுத் தருகின்றதே ஒழிய, நல்ல குடிமகனாக்குவதில்லை. மேலும் கடுமையான போட்டிகள் நிறைந்த இக்காலட்டத்தில், தோல்வி குழந்தைகள் மனதை ரணமாக்குகிறது. விஜய் டி.வி.யின் பாட்டுப் போட்டியில் தோல்வியுற்றதால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் படம்பிடித்துக் காண்பிப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.
வளரும் குழந்தைகளுக்கு கலைத்திறமைகளை கற்றுத்தருவதை விட, அவர்களை மக்களின் பால் பற்று கொண்ட நன்மக்களாக மாற்றுவதே அத்தியாவசியமானது. உண்மையில் அவர்களது வன்முறை எண்ணத்தை மடைமாற்றும் சூட்சுமம், இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு, உடலுழைப்பு அறவே கிடையாது. எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. இது போக வேலையாட்கள்! பெற்றோர்கள் பணியாட்களை மிரட்டுவது போல பிள்ளைகளும் செய்கிறார்கள். குறைந்த பட்சம் தன்னைப் பராமரித்துக் கொள்வதைக் கூட இக்குழந்தைகள் செய்வதில்லை. பெற்றோரும் விரும்புவதில்லை. தான் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கோ, உடுத்தும் உடையைத் துவைப்பதற்கோ பழகிக் கொள்ளாத ஒரு சிறுவன்தான், இந்த உலகம் தனக்காகப் பணிசெய்ய படைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறான். இந்த அணுகுமுறையில் நெருடல் வரும்போது, தவிர்க்கவியலாமல் வன்முறையின் பக்கம் நகர்கின்றான்.
அருகும் விளையாட்டுஅரிக்கும் வீடியோ விளையாட்டு!
உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது, வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில்தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தைப் பெறுவதற்கும், விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர, விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.
இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத் தள மையங்களில் பாலுறவு விசயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல், மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.
இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு, இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.
விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைதற்கேற்ப, நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது.
விதவிதமான உணவு வகை எல்லைமீறும் உணர்ச்சிகள்!
இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அன்னியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விசயம் நவீன உணவு வகைகள். பீட்ஸா, பர்கர், விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள், பெட்டிக் கடைதொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பாக்கட்டுகள், உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள்.... இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல, குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.
குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டையிடுவது இவ்வுணவு வகைகளுக்காகத்தான். வீட்டுச்சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இது பற்றி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால் அந்தக் கவலை, குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.
உண்மையில் இந்த "குண்டு' பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்öகனவே அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது, டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது, குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.
அரசு பள்ளி நன்மைகள்தனியார் பள்ளி தீமைகள்!
இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.
ஏழையும், பணக்காரனும், குறிப்பிட்ட அளவில் சாதிய வேறுபாடுகள் இல்லாமலும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் அரசுப் பள்ளிகளில் சங்கமித்தனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களின் வழியாக கிராம வாழ்க்கையைப் பற்றியும், விவசாயத்தின் நிலை குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர். தனது வர்க்கம் தவிர, ஏனைய வர்க்கங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பை அன்றைய அரசுப் பள்ளிகள் வழங்கின. அதனால்தான் இன்றைய மாணவர்களை விட, சென்றதலைமுறை மாணவர்கள் பொது அறிவிலும், வாழ்க்கை குறித்த யதார்த்தமான கண்ணோட்டத்திலும் மேம்பட்டு விளங்குகின்றனர். திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இந்தப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமது அடிப்படையைக் கட்டியமைத்தன.
இன்று வர்க்க முரண்பாடு துல்லியமாகப் பிரிந்து விட்டது. காசு உள்ளவனுக்கு தனியார் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரி; இல்லாதவனுக்கு அரசுப்பள்ளி. தனியார் மயம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேட்டைக்காடாக மாற்றிவருகிறது என்ற அநீதிக்கு, குறைவில்லாத பங்கை தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன. மேற்கண்ட துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும், இத்தகைய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அரசுப் பள்ளிகள் என்னென்ன நன்மைகளைச் செய்கிறதோ, அவற்றின் நேரெதிர் தீமைகளைத் தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் செய்து வருகின்றன. இங்கு மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தோரே படிக்க வருகின்றனர். உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கடன் வாங்கியாவது இப்பள்ளிகளுக்கு வந்தாலும், இவர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ஆகவே இப்பள்ளிகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. வண்ணமயமான வாழ்க்கையின் வகைகள் இங்கே பரிமாறப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் காரியவாத வாழ்க்கை மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கிறது.
சமீபத்தில் சந்தைக்கு வந்த செல்பேசிகள், வாகனங்கள், டி.வி.க்கள், கணினிகள் எவை என்பதுதான் இங்கே மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கல்வி! எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ, அமெரிக்கா முதலான இலட்சியங்களை அடையவேண்டும் என்பதை இப்பள்ளிகள் ஊட்டி வளர்க்கின்றன. அவ்வகையில் சுயநலமும், பிழைப்பு வாதமும் மாணவர்களின் நற்பண்புகளாக ஏற்றப் படுகின்றன.
இதனால் போட்டி, பொறாமை, இரக்கமின்மை, முதலிய சொத்துக்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது இலட்சியத்தை அடைவதற்குத் தேவைப்படுகின்றன. எல்லா மாணவர்களும் இக்காரியவாதப் போட்டியில் வெல்லமுடியாது என்பதால் சோர்வும், விரக்தியும், தனிமைப்படுவதும் நடக்கிறது. சில சமயங்களில் அது சமூகத்தின் மீதான கோபமாகவும் வெடிக்கிறது. தன்னிலும் ஆடம்பர வாழ்வைப் பார்த்து ஏங்குவதும், அதை அடைய குறுக்கு வழிகளை நாடுவதும் இயல்பான விசயங்களாக ஏற்கப்படுகின்றன.
முன்னர் கண்ட செல்பேசிஇணையக் கலாச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உறவு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பீர் கலாச்சாரம், வீடியோ விளையாட்டு முதலியவற்றிலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி திறக்கும் பருவத்தில் எல்லாத் தனியார் பள்ளிகளும் தங்களது தேர்ச்சி விகிதத்தை விளம்பரமாக வெளியிட்டு பெற்றோர்களை ஈர்க்கின்றன.
அந்த விளம்பரங்களில் கூறப்படாத செய்தி என்னவென்றால், வன்முறை விகிதத்திலும் இப்பள்ளிகள்தான் முதலிடம் வகிக்கின்றன என்பதுதான். சுருங்கக்கூறின் அரசுப் பள்ளிகள் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் போது, தனியார் பள்ளிகளோ ஒரு மாணவனை சமூகத்திற்கு விரோதமான தனிநபராய் வளர்க்கின்றன. கல்வியில் தனியார்மயம் நுழைந்ததற்கு, நாம் பெற்றுள்ள சாபக்கேடு இதுதான்.
நடுத்தர வர்க்கத்தின் தனியார் பள்ளி மோகத்திற்கு இணையான மற்றொரு மோகம், ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்விக்கும் மாணவர் வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் கண்ட துப்பாக்கி வன்முறை மாணவர்களெல்லாம், ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்கள்தான். இதை வைத்து மட்டுமே, ஆங்கில மோகம் வன்முறையை வளர்க்கிறது என்று சொல்லவில்லை. சிறார்களின் கல்வியறிவுக்காக பயன்படுத்தப்படும் ஆங்கிலம், அவர்களுடைய வாழ்க்கையை ரத்து செய்கிறது. ஐ.டி துறையின் எழுச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பிற்காக ஆங்கிலம் மட்டுமே உதவும் என்ற சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வியின் மீது பலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதும், அதை ஒரு பயிற்று மொழியாகவே பயன்படுத்துவதும் ஒன்றல்ல.
அன்னியப்படுத்தும்ஆங்கில மோகம்
1947க்குப் பின்னர் உயர் கல்விக்காகப் படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பதோடு ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்களாக இருப்பதையும் காண்கிறோம். இவர்களது பெற்றோர்கள் எவரும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவர்கள் அல்லர். இருப்பினும் வறியவாழ்க்கையோடு, பலமைல் தூரம் நடந்துச் சென்று, கல்விக்காகக் கடும் உழைப்பு செலுத்தி, போராடிக் கற்றார்கள். அந்தக் கால ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணி செய்தார்கள்.
அதற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், வசதியான வாழ்க்கையுடன் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழும் தெரியாமல் இருப்பதைக் காண்கிறோம். இது போக, இன்றைய மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பொழுது போக்குகளும் ஏராளம். மேலும் அன்று உயர்கல்வி முடித்தால் ஏதோ ஒரு அரசுப் பணி கிடைக்கும் என்ற நிலைமையும் இன்று இல்லை. இந்தப் பிரச்சினையை ஆங்கிலவழிக் கல்வி தீர்த்து விடாது என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
மேலும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை யதார்த்தமான சமூக வாழ்க்கையிலிருந்து அன்னியப்படுத்துவதோடு, அவனது அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வளரும் சிறார்கள் தாயுடனும், தமிழுடனும் சேர்ந்தே உலகை அறியத் துவங்குகிறார்கள். பெற்றோர், சுற்றம், உற்றம், நட்பு, தெரு, பெட்டிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், வணிகர்கள், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர் என தமிழால் சூழப்பட்ட உலகில்தான், சிறார்களின் வாழ்க்கைக் கல்வி துளிர் விடத் துவங்குகிறது. இந்தச் சூழலை ஆங்கில வழிக் கல்வி செயற்கையாக துண்டிப்பதோடு, அந்த உறவு மேற்கொண்டு வளர விடாமலும் செய்கிறது.
இதனால் ஆங்கில வழிக் கல்வியின் உலகம் பள்ளி வகுப்பறையுடன் சுருங்கி விடுகிறது. அதனால்தான் ஆங்கில வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுவில் தனிமை விரும்பிகளாகவும், சிறுசிறு பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு இலாயக்கில்லாதவர்களாகவும், சமகாலப் பொதுஅறிவில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு ஆங்கிலம் விதித்திருக்கும் இத்தடைகள்தான், அவர்களை பொறுமையிழந்தவர்களாகவும், வன்முறை சுபாவம் கொண்டவர்களாகவும் மெல்ல மெல்ல மாற்றுகிறது. தமிழை விட ஆங்கிலம்தான் நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லா வகைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி தீப்பிடிக்க வைக்கிறது.
தேம்ஸ் நதிக்கரையையும், வாஷிங்டன் அதிபர்களையும், அமெரிக்க மல்யுத்த வீரர்களையும், வால்ட் டிஸ்னியின் முயலையும் அறிந்து வைத்திருக்கும் ஆங்கில மாணவன், தாமிரபரணி நதி பற்றியோ, காவிரியின் கீழத்தஞ்சை விவசாயப் பிரச்சினை பற்றியோ, காஞ்சிபுரத்தின் பட்டுத்தறி பற்றியோ, ஏன் கபடி விளையாட்டைக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இப்படி தமிழக வாழ்க்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தனக்குத் தொடர்பற்ற மேற்கத்திய விசயங்களுக்கு அறிமுகமாகும் மாணவன்தான் இந்த மண், மக்கள், வாழ்க்கை குறித்து வெறுப்போடும், நம்பிக்கையில்லாமலும் வாழப் பணிக்கப்படுகிறான்.
விவசாயப் பிண்ணனியிலிருந்து வரும் ஒரு மாணவனுக்கு, நூற்றுக்கணக்கான தாவர வகைகளும், கிராம வாழ்க்கை மூலம் விவசாய அனுபவமும் தமிழ் வழியாகத்தான் தெரிந்திருக்கும். இம்மாணவன் ஆங்கிலத்தின் மூலம் தாவரவியலைக் கற்பதால் என்ன நடக்கும்? அவன் சேகரித்து வைத்திருந்த அறிவுக்குப் பயனில்லாமல் போவதோடு, ஆயிரக்கணக்கான ஆண்டு விவசாய அறிவைத் தாங்கி வரும் தமிழக விவசாயிகளுடன் பேசுவதற்குக் கூட வழியில்லாமலும் போகிறது. இந்த அவலம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.
இதனால்தான் ஆங்கில வழிக் கல்வி அறிவுத் திறனை மட்டுப்படுத்துவதோடு, சமூகத் தொடர்பையும் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறோம். ஆங்கிலவழிக் கல்வியினால் வேலை கிடைத்துவிடும் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக, சிறார்களை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும், உண்மையில் தமது வாரிசுகளை வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக மாற்றுகிறார்கள். இது போக இன்றைய பாடத்திட்டமும் மேலும் மேலும் தொழில்முறைத் தேர்ச்சியை நோக்கி மாற்றப்படுவதால் அதில் பொது அறிவும், சமூகக் கண்ணோட்டமும் அருகி வருகிறது.
இந்த நோய்களோடு வட இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு சாதிவர்க்கத் திமிரும் சேர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் இவை இல்லாமலில்லை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களில் இவை அதிகம். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மேல் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.
வட இந்தியாவில் அநேக பிரபலங்கள் துப்பாக்கியோடும் பாதுகாவலர்களோடும்தான் உலா வருகிறார்கள். அப்பனே கிரிமினலாக இருக்கும் போது, மகன் அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மாதான் வடக்கின் மேட்டுக்குடி மாணவர்களுக்கு வகை மாதிரி. ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது வன்மம் கொண்டவர்களாகத்தான், வட இந்திய மாணவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கூடவே இந்துமதவெறிப் பாசிசத்தின் செல்வாக்கும் இவர்களிடத்தில் அதிகம்.
···
இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். பொதுவில் இன்றைய மாணவத் தலைமுறையினர் இளமைக்குரிய துடிப்புடனோ, உற்சாகத்துடனோ, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனோ இல்லை. முக்கியமாக, அவர்களது மனவலிமை மேலும் மேலும் குறைந்து வருகிறது. பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்கள் வந்தவுடனேயே, தேர்ச்சி பெறாத மாணவர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். வீட்டு நிலைமைக்குப் பொறுப்பேற்கும் சென்ற தலைமுறையின் பண்பு கூட, இத்தலைமுறை மாணவர்களிடத்தில் இல்லை. காலச்சூழலில் அடித்துச் செல்லப்படும் இன்றைய நிலையில், நாம் என்ன செய்ய முடியும் என்று சிலர் விரக்தி அடையலாம். அப்படி இல்லை.
இக்கட்டுரை மாணவரைச் சீர்குலைக்கும் விசயங்களைப் பரிசீலிப்பதோடு நின்று விடவில்லை. நேர்மறையில் ஒரு மாணவனை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தீர்வுகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்வதோடு, நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அற்பப் பிரச்சினைகளுக்காக ஆத்திரங்கொண்டு வெடிப்பதற்குத் துப்பாக்கிதான் வேண்டுமென்பதில்லை, கிடைக்கும் எதுவும் பயன்படும். அதுவும் கண்காணாத ஒரு வீட்டில்தான் நடக்கவேண்டும் என்பதில்லை, அந்த வீடு உங்களுடையதாகவும் இருக்கலாம்.
..
· வேல்ராசன்
நன்றி - பி.இரயாகரன் http://tamilarangam.blogspot.com
1 comment:
கட்டுரையை மறு பிரசூரம் செய்ததற்கு நன்றி.
புமாஇமு வின் கூகிள் பக்கத்தில் கருத்துப் பிழை உள்ளது என்று நினைக்கிறேன்.
முகப்பு பக்கத்தில் மறுகாலனியம் என்று தமிழில் உள்ளது அதன் மீது மவுஸ் பாயிண்டரை கொண்டு சென்றால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வருகின்றன.
அது neocoloism என்று காட்டுகிறது. அதை recolonism என்று சரி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன்.
Post a Comment