கடந்த மாதம் 31ம் நாள் முத்துக்குமார் தன்னையே எரித்துக்கொண்டதும் அந்த தீ தமிழகமெங்கும் ஈழத்தமிழர்களுக்காக போராட்டமாக பற்றி பரவியது. ஆனால் சென்னை நெற்குன்றம் பகுதியிலோ வேறு வகையான தீ எரிந்து கொண்டு இருந்தது. என்ன அது என எட்டிப்பார்த்தா, அந்த தீ கோவில் கும்பாபிஷேகத்திலிருந்து எழுந்து வந்தது. உற்று பார்த்தபோது இந்த கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்திக் கொண்டு இருந்தவர் சிபிஎம் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி அவர்கள்.
முத்துக்குமார் உடல் எரிக்கப்பட்டதருணத்தில் இந்த வெள்ளைச்சாமி கோவிலில் யாகத்தில் தீயிட்டு நடத்திக்கொண்டு இருந்தார். கொளத்தூரில் முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் தமிழகமே அணிதிரட்டபோது இந்த வெள்ளைச்சாமி ஆட்டோவில் ஓம்சக்தி! பராசக்தி! என முழங்கிகொண்டு இருந்தார்.
முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் அவருடைய நினைவினை நெஞ்சில் ஏற்று ஈழத்தமிழர்களுக்கெதிரான இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து முறியடிக்க புரட்சிகர சக்திகள் மக்களை அறைகூவி அழைத்துக்கொண்டுயிருந்தபோது, இந்த வெள்ளைச்சாமி டாஸ்மாக் சரக்கினை ஏற்றிக்கொண்டு 'பகுதிவாழ் மக்களே கோவில் பிரசாதத்தை வாங்கி சென்று அம்மன் அருளை பெற்றுச் செல்லூங்கள்' என அழைத்துக்கொண்டுயிருந்தார்.
இவையனைத்தையும் விட 'மார்க்சிய கொள்கை உறுதியோடு மக்கள் உணர்வை நிறைவேற்றிய மக்கள் ஊழியனே! நீர் பல்லாண்டு காலம் வாழ்க!!' என்ற டிஜிட்டல் பேனரில் வெள்ளைச்சாமி பல் இழித்ததை தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
மார்க்சியம், பகுத்தறிவு என்ற வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டு பக்தி பரவசம் ஆடுவதும், 'சந்தை சோசலிசம்' என கூறிக்கொண்டு சிங்கூர்,நந்திகிராமில் மக்களை படுகொலை செய்வதும் என இந்த போலிக் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து தங்களது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றி வருகின்றனர்.
புரட்சிகர சக்திகளான நாம், இவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல் எதிரிகளை முறியடிக்க முடியாது.
No comments:
Post a Comment