Monday, December 8, 2008

உண்மைக்கு மாறான செய்தியினை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியீடு!

நவ 25-2008 அன்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னைப்பதிப்பில் நாகப்பட்டினம் திட்டச்சேரி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை "புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி" அமைப்பை சார்ந்தவர்கள் தாக்கியதாக உண்மைக்கு மாறான செய்தியினை வெளியீட்டு உள்ளது.

ஆனால் அங்கு மாணவர்களிடம் கட்டாய நன்கொடை வசூலிப்பது, பள்ளியின் நிர்வாகச் சீர்கேடு போன்றவற்றை கண்டித்தும், எதிர்த்தும் எமது அமைப்பு போராடி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை நாங்கள் தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி எமது அமைப்பு தோழர்கள் மீது வழக்கினை போட்டு சிறையில் அடைத்துயுள்ளது காவல்துறை.

இதற்கு ஆதாரமான விரிவான பிரசுரம் பின்வருமாறு





சட்டக்கல்லூரிகளை உடனே திற - புமாஇமு கண்டன ஆர்ப்பாட்டம்


சென்னை மெமோரியல் ஹால், GH எதிரில் 3- 12- 2008 அன்று மாலை 4.30 மணியளவில் புமாஇமு அமைப்பினர், மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற என்ற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
..
ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலையொட்டி மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற!
தலித் மாணவர்களை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
..
இந்த மோதலை காரணம் காட்டி கல்லூரிகளில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயலும் அரசின் நோக்கத்தை முறியடிப்போம்!
..
அம்பேத்கர் சட்ட கல்லூரி பிரச்சனையையொட்டி தமிழரங்கம் (TamilCircle) மற்றும் வினவு கட்டுரைகள் பின் வருமாறு.

Related Links:
புமாஇமு - பிரசுரங்கள், சுவரொட்டிகள்
மூடிய சட்டக்கல்லூரிகளை உடனே திற! தீண்டாமை குற்றம் செய்த முக்குலத்தோர் மாணவர் பேரவையைச் சார்ந்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்!
சாதி-மத வெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! மாணவர்களாகிய நாம் ஒரு வர்க்கமாக ஒன்றிணைவோம்!
ஆதிக்க சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடு!
தமிழரங்கம் - கட்டுரைகள்
தேவை : சாதிக்கெதிராய் கலகம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது
சட்டம் படிக்க வந்த காட்டுமிராண்டிகளின் கதை....
வினவு - கட்டுரைகள்
சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!
சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை - அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !
ஆனந்த விகடனின் சாதி வெறி !

Monday, November 24, 2008

ஆதிக்க சாதிவெறி சக்திகள் மீது நடவடிக்கை எடு!




உலகத்தை விடிய வைத்தது நீதானடா

உலகத்தை விடிய வைத்தது நீதானடா
உன் வாழ்வில் ஒளி இல்லை இருள் ஏனடா
நீயின்றி உலகம் இல்லையே
வானமே உனது எல்லையே
உனக்கென்று ஏதும் இல்லையே....
(உலகத்தை)
..
இடி மின்னல் மழையானாலும்
தளறாது உந்தன் கைகள்
குளிரிலே ரோமங்கள் போல் எழுந்திடும் - மின் கம்பங்கள்
உனது வியர்வை அனையை மீறுமே
உயிர் பெறும் மின்சாரமே
நரம்பில் ஓடும் இரத்தம் போலவே
சிதறிபாயும் பூமியாவுமே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
ஓடிடும் ஆலைக்கெல்லாம் உயிர்மூச்சு - மின்சாரம்
உருவமில்லா உயிருக்கு உன் உதிரமே - ஆதாரம்
கடலுள்ளும் கம்பி படறுதே கையளவாய் உலகம் சுருங்குதே
வலையாகி கைகள் விரியுதே வானையே வெற்றி கொல்லுதே
உனக்கென்று ஏதும் இல்லையே...
(உலகத்தை)
..
நிலக்கரி கருவுலையில் உறங்கிடும் - மின்சாரம்
நெற்றி வியர்வை கொட்டி- கொட்டி எழுப்பிடும் உனது கரம்
உனது உடல் இழையாய் வேகும்
உலகமே பகலாய் மாறும்
உனது விழி ஒரு நொடி மூடும்
உலகமே ஒளியைத் தேடும்
உனக்கென்று ஏதும் இல்லையே
(உலகத்தை)


Saturday, November 15, 2008

நாம் என்ன செய்யப் போகிறோம்!

நவம்பர்‍‍‍‍-7,2008
ரஷ்யப் புரட்சியின்
91-வது ஆண்டு்விழா!
..
உள்ளமெங்கும்
மகிழ்ச்சி ததும்பி
அரங்கமெங்கும்
நிரம்பி வழிந்த
குழந்தைகளின்
குதூகலமும்
அரங்க நிகழ்வுகளும்

ரஷ்யாவைப்போல்
இங்கோர்
புரட்சி நிகழ்ந்து விட்டதாய்
என்னும்படியாக
எதிர் காலத்திற்கே
இட்டுச்சென்றது
என்னை!

குறையேதும்
காணுமுடியாத
குழந்தைகளின்
அரங்கேற்றத்தில்...

தொழில்முறை கலைஞனின்
செய்நேர்த்தி கொண்ட
இசைச்சித்திரக்குழு
மாணவர்களின்
திறமையில்...

மனதை வருடும்
இசையில்
பாரதிதாசனின்
தாலாட்டுப்பாடல்-தந்த
பரவசத்தில்...

"எங்கிருந்து
ஒலிக்கிறது இந்தக்குரல்"-
வினாயெழுப்பி
வியக்கவைத்த
அந்தக் கிழட்டு
இளைஞனின்
கம்பீர குரலின்
பிரமிப்பில்...

மொத்த நிகழ்வும்
தந்த போதையில்
இலயித்துப்போன
என்னை...

நிகழ்காலத்துக்கு
என்'காலத்'துக்கு
இழுத்து வந்தது
"இப்படியிருந்தால்
எப்படி வரும் புரட்சி?"-
உரைவீச்சு.

இமை மூடி
செவி பொத்திய போதும்

"என்னால்
இவ்வளவுதான் தோழர் முடியும்..."

"கொஞ்சம்
குடும்பத்துல பிரச்சிணை..."

"பொதுநிகழ்ச்சிக்கு வார்ரேன்
நன்கொடை தார்ரேன்
அதுக்கு மேல..."

இன்னும் பல விதமாய்...

செவுளில்
மோதிச் சென்றன...

இன்று காலை வரை
நான் சொல்லி வந்த
அற்ப காரணங்கள்!

"எப்படிங்க
இருந்தது நிகழ்ச்சி?"-
தோழரின் கேள்வி...

செவியில் நுழைந்து
மனதை குடைந்து
என்னுள்
எதிரொலித்துக்
கொண்டேயிருக்கிறது...

புரட்சிக்காக
"நாம்
என்ன செய்யப் போகிறோம்?"என்று!

_ இளங்கதிர்.

Saturday, November 1, 2008

எது பிரெய்ன்வாஷ் - குட்டிக் கதை!

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.

"என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே! நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே! எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க!.. இத விரும்பி படிப்பீங்க போல?"

"ஆமாம். உண்மையைத்தானே சொல்றாங்க! நீங்க படிப்பீங்களா?"

"படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க மாட்டேன். ரெகுலரா படிச்சோம்னு வச்சிக்குங்க .. அப்படியே நம்மள பிரெய்ன்வாஷ் பண்ணிடுவாங்க!"

"அது என்னங்க.. துணி வாஷ் மாதிரி, பிரெய்ன்வாஷ். அழுக்கா இருந்தா சலவைக்குப் போட வேண்டியதுதானே!"

"ஐ மீன்.. பிரெய்ன்வாஷ்னா.. எதையாவது ஒன்னச் சொல்லி அவங்க சொல்றதுதான் சரின்னு ஆக்கிடுவாங்க.. நம்மள அவங்க பக்கம் இழுத்துடுவாங்க .. புரியுதா!"

"எங்கயும் போயிடாதீங்க, தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கன்னு டி.வி.யுலயும்.. ஏன் உங்க மருந்துக் கம்பெனி முதலாளி வரைக்கும் எதையாவது சொல்லி, பொருளை விக்கறதுக்காக அவங்க பக்கம் நம்மள இழுக்கும்போது.. இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறணும்னு தொழிலாளிங்க கருத்துச் சொன்னா அது தப்பா?"

"உடனே தொழிலாளி முதலாளின்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க.. மனுசன இயல்பா ஃபீல் பண்ணவுடணும் பாஸ்! சும்மா எப்ப பாத்தாலும் 'அவன் ஒழிக! இவன் ஒழிக! புரட்சி'ன்னு பேசி பப்ளிக்கை டெர்ரர்ராக்கி .. லைப்ல ஒரு ஜாலியே இல்லாம .. வேஸ்டாயிடும் !"

"உழைக்குற எல்லாரும் அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி 'இயல்பா' பணத்தை எடுத்துக்க முதலாளி விடுவானா? தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே! இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா?"

"பாத்தீங்களா! மெல்ல மெல்லப் பேசி .. என்னையே பிரெய்ன்வாஷ் பண்ணிடுவீங்க .. இதான் கம்யூனிஸ்டு வேலையே!"

"ஏன் நீங்க செய்யலையா? ஏற்கனவேதான் டாக்டர் மருந்து எழுதிக்கிட்டு இருக்காரே! அவரை இயல்பா இருக்கவுடறீங்களா? உங்க கம்பெனி மருந்துகளைக் காட்டி, அதப் பத்தியே பேசிப் பேசி டாக்டரை ஏன் பிரெய்ன்வாஷ் பண்றீங்க? நீங்க முதலாளிக்காகபிரெய்ன்வாஷ் பண்ணலாம்! தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது!? இல்ல!"

"பாஸ்.. என்ன புரிஞ்சுக்காம பேசுறீங்க? இது அட்வான்ஸ்ட் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸ்டா க்யூர் பண்ணுது! இது தேவை இல்லையா? என்ன சயின்சும் வேணாம்பீங்க போல.."

"அறிவியல் வேண்டாம்னு சொல்லலை.. அதைப் பண்டமாக்கி விக்கிறீங்க நீங்க.. அதை சமூக மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்ங்குறோம் நாங்க. இப்ப இருக்குற தனியுடமை, சுரண்டல், சாதி மத ஆதிக்க நோய்களுக்கு, அதை விரட்ட 'அட்வான்ஸ்டா' அரசியல் மட்டும் கூடாதா? அதச் சொன்னா பிரெய்ன்வாஷா!"

"இதாங்க.. உங்கள மாதிரி ஆளுங்க.. அது அதுக்கு ஒரு பதில் சொல்வீங்க.. பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.. ஏன் நெகட்டிவாவே யோசிக்கிறீங்க.. சும்மா குறையை மட்டுமே பாக்குறீங்க.. எவ்வளவு மாடர்னா லைஃப் வந்துருக்கு.. சயின்ஸ், மருந்து, டெக்னாலஜி.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு! நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ்! இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க ..? இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா?"

"சில பேருக்கு நீங்க சொன்ன எல்லா வசதியும் ஏன் இல்லாமல் இருக்குன்னு யோசிக்கறதுக்குப் பதில், இல்லாததைப் பத்திப் பேசுறதே தப்புங்குறீங்களே! இது வயலன்ஸ் இல்லையா? உங்க கருத்துப்படி சயின்ஸ் முன்னேறிய இந்த நாட்டில் வறுமை காரணமாகப் பெத்த பிள்ளைகளைக் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள் ஒரு தாய். நீங்க சொன்னபடி டெக்னாலஜி முன்னேறிய இந்த நாட்டில் இன்னும் மனித மலத்தைக் கையால் அள்ளும்படி வேலை வாங்கப்படறாங்க தாழ்த்தப்பட்ட தொழிலாளிங்க.. இப்படி ஒரு பகுதி உண்மை நிலவரத்தை மறச்சிட்டு நாடு பொதுவா முன்னேறி எங்கோ போயிட்டிருக்குன்னு நீங்க பேசறதுதான், அடுத்தவங்க மேல கருத்தைத் திணிக்கறது, அதுவும் தப்புத் தப்பா!"

"பாத்தீங்களா! நான் சொன்ன மாதிரி இதுபோல பத்திரிக்கைகளைப் படிச்சுப் படிச்சு நீங்களும் அதுவாவே மாறிட்டீங்க! இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ்! தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும்! சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் ரீட் இட் அண்ட லீவ் இட்..!"

"இப்ப நீங்க பேசறது ஒரு சித்தாந்தம் இல்லையா? உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க..? நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம்?"

"ஹலோ நீங்க ஆயிரம் சொல்லுங்க.. உங்கள மாதிரி பேசிக்கிட்டு இருக்குறவங்க ஊருக்கு ஒரு பத்துப் பேரு இருப்பீங்களா? எங்கள மாதிரி உள்ளவங்கதான் மெஜாரிட்டி.. இதுதான் பாஸ் யதார்த்தம்.. சும்மா ஏதாவது கற்பனையாப் பேசாதீங்க.. "

"நாட்ல மெஜாரிட்டி நோயாளிங்க; எய்ட்ஸ் பிரபலமா இருக்கு. அதுக்காக அதை ஆதரிக்க முடியுமா? நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு?"

"கருத்துன்னு கேட்டா.. நீங்க ஏத்துக்க மாட்டீங்க.. பட் பல இடத்துக்கும் போறதால ஐ நோ த ட்ரூத் வெரிவெல்,! இந்த புரட்சி அது இதெல்லாம் எடுபடாது.. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.. நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்."

"பாத்தீங்களா! ஜம்ப் ஆகுறீங்களே .. ஜனங்க இருக்கட்டும். நீங்க ஏத்துக்குறீங்களா.. இல்லையா..? அதச் சொல்லுங்க முதல்ல?"

"நோ.. நோ.. எனக்கு இந்த கம்யூனிசம்னாலே அலர்ஜி.. நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன். ஒருநாளும் கம்யூனிஸ்டா மாறவும் மாட்டேன்.."

"ஏன் மாறுனா என்னாகும்?"

"நான் ஏன் கம்யூனிஸ்டா மாறணும் .. எனக்குதான் எல்லா வசதியும் இருக்கே! ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் டு டேக் எனி ரிஸ்க்!"

"இப்பதாங்க உள்ளபடியே உங்கள சரியாக அறிமுகப்படுத்திட்டு உண்மையைப் பேசுறீங்க.. உங்க வர்க்கத்துக்கு கம்யூனிசம், புரட்சி தேவையில்லைங்குறதுக்காக.. அதை மத்தவங்களுக்கும் தேவை இல்லைன்னு பேச்சுவாக்குல பிரச்சாரம் பண்றீங்க பாருங்க.. இதுதான் பிரெய்ன்வாஷ்.. அடுத்தவங்க மேல கருத்தத் திணிக்கறது.. இப்ப புரியுதா!"

"என்ன டென்சனாயிட்டீங்க போல. விட மாட்டேங்குறீங்க.. வரட்டா!.. பிசினஸ் பாஸ்! டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா!"

"புரியுது.. புரியுது.. டார்கெட்டோடுதான் இருக்கீங்க .."

"ஓ! ஐ அண்டர்ஸ்டேண்ட்.. பட் ஐ டோண்ட் கேர். ஹா.. ஹா.. ஹா.."

வறட்டுச் சிரிப்புடன் நகர ஆரம்பித்தார்.. வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.

புதிய கலாச்சாரம், அக்'08 இதழிலிருந்து

Tuesday, October 28, 2008

பெட்ரோல் டீசல் விலை உயர்வு :மக்களின் மரணத்தின் மீதே இந்திய அரசின் கொடி ஏற்றப்படுகிறது!

50 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் விற்றபோது அரசின் வருமானம் ரூ 25 க்கும் மேல். அதாவது ஆண்டுக்கு 1.25 லட்சம் கோடி. பின்னர் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 147 டாலர் விலையேற்றத்தை காரணம் காட்டி உடனே விலையினை உயர்த்திய இந்திய அரசு, அதே பேரல் தற்போது 68 டாலருக்கு குறைவாக இறங்கி உள்ளபோது விலையினை குறைக்க மறுக்கிறது.
..
இந்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் வருமானம் என்பது இவ்வாறு மக்களிடம் இருந்து வரியாக பிடுங்குவதும், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதும் மூலம் மட்டுமே பெறப்படுகிறது.
..
அப்படி பெற்று போடும் பட்ஜெட் யாருக்காக செலவு செய்யப்படுகிறது.
முழுக்க முழுக்க பன்னாட்டு கம்பெனிகள் - தரகு முதலாளிகளின் தேவைக்கான பாலங்கள், சாலைகள் போன்ற உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்கவும், தெற்காசிய ரவுடியாக தான் மாறுவதற்காக ஆயுத தளவாடங்கள் வாங்கி குவிப்பதற்குமே.
..
இந்த உள்நாட்டு கட்டமைப்பை தான் போட்டி போட்டு கலைஞர், இந்து மதபயங்கரவாதி மோடி, போலி புத்ததேவ் போன்ற மறுகாலனியாக்க அடிமைகள் செய்து வருகின்றன. இந்த ஆயுத தளவாடங்கள் தான் ஈழத்தில் தமிழர்களை கொல்வதற்கு சிங்கள பேரினவாத அரசுக்கு வழங்கப்படுகிறது.

Wednesday, October 22, 2008

பிஞ்சென்றும் பாராது இலாபவெறி

தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), இந்தியாவிலேயே மிகப் பெரிய மருத்துவ நிறுவனம். இந்திய மருத்துவத்தின் தரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துவதையும், இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்குவதையும் இலட்சியமாகக் கொண்டு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மத்திய அரசு நிறுவனம். இந்த நிறுவனம்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தரும் டாலருக்காக பிஞ்சுக் குழந்தைகள் மீது, புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகளை நடத்தி, இதுவரை 49 குழந்தைகளைக் கொன்றுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் கேட்டிருந்த தகவல் மூலம் கடந்த இரண்டரை ஆண்டுகளில், 4,142 குழந்தைகள் மீது, அதிலும் பெரும்பான்மையாக (2,728) ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகள் மீது இந்த நிறுவனம் சோதனைகளைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சோதனைகளின் போது 49 குழந்தைகள் இறந்துள்ளன.

கடந்த 30 மாதங்களில் 42 வகையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள், வெளிநாடுகளில் தயாரான 5 மருந்துகள், குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டச் சோதனை செய்யப்பட்டுள்ளன. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகளில், இறந்த குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் மட்டுமே தெரிய வந்துள்ளன. ஆனால், புதிய மருந்துகளால் ஏற்பட்டுள்ள பக்கவிளைவுகள் பற்றியோ, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பற்றியோ எவ்விதத் தகவலும் இல்லை. இது பற்றிய தகவல் தங்களிடம் இல்லை என்று எய்ம்ஸ் நிறுவனம் கூறிவிட்டது. அதாவது, மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட சிறிது காலம் வரை மட்டுமே அந்த குழந்தைகளின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டுள்ளது. பின்பு அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.



இந்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு, குழந்தைகளின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கியே இந்தச் சோதனைகளைச் செய்வதாக இவர்கள் கூறுகின்றனர். ஆனால், மருத்துவ வசதிகோரி எய்ம்ஸ் நிறுவனத்திற்கு வருபவர்களில் பெரும்பான்மையினர் ஏழை எளிய மக்கள்; படிப்பறிவில்லாதவர்கள். இவர்களது குழந்தைகள் மீதுதான் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தங்களது குழந்தையின் மீது இப்படி ஒரு சோதனை நடத்தப்படுகிறது என்பதும், இதனால் தங்களின் குழந்தைகளின் உயிருக்கே கூட ஆபத்து உண்டாகும் என்பதும், அவர்களுக்குப் பெரும்பாலும் தெரியாது. குழந்தைக்கு நோய் குணமாக ஏதோ புதிய மருந்தை மருத்துவர் இலவசமாகத் தரப்போகிறார் என்றே பலரும் நினைத்தனர். அதன்படியே, மருத்துவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்தும் போட்டுள்ளனர்.



இந்தச் சோதனையில் குழந்தை இறந்தாலோ, அல்லது பக்க விளைவுகளுக்கு உள்ளானாலோ முறையான இழப்பீடும் கிடையாது. இது போன்ற சோதனைகள் தில்லியில் உள்ள எய்ம்ஸ் நிறுவனத்தில் மட்டுமல்ல; நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.



திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட புற்று நோய்க்கான புதிய மருத்துவ ஆராய்ச்சி முதல் ஆந்திராவில் பில் கேட்சின் உதவியுடன் செயல்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் (ஹெப்படைடிஸ் பி) தடுப்பூசி சோதனை வரை பன்னாட்டு நிறுவனங்களின் பல வகையான புதிய மருந்துகள் இந்திய மக்களின் உடலில் செலுத்தப்பட்டு சோதிக்கப்படுகின்றன.



அமெரிக்க மற்றும் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றில், மனிதர்கள் மீது மருத்துவச் சோதனைகள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட சில மேலை நாடுகளில் கூட சட்டதிட்டங்கள் கறாராக இருப்பதாலும், ஆய்வுக்கான செலவும் மிக அதிகமாய் இருப்பதாலும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளைக் குறிவைத்துள்ளன. இதற்காக ஆகும் செலவில் 10 சதவீதத்திலேயே இந்தியாவில் சோதனையைச் செய்துவிட முடியும்.



பன்னாட்டு மருந்து நிறுவனங்களான நோவோ நார்டிஸ்க், அவென்டிஸ், நோவார்டிஸ், கிலாக்ஸோ ஸ்மித் கிலைன் மற்றும் ஃபைசர் ஆகியன தங்களது மருந்துச் சோதனைக் கூடங்களைப் பல இந்திய நகரங்களில் நிறுவி வருகின்றன. 2010ஆம் ஆண்டுக்குள் 20 இலட்சம் இந்தியர்களின் மீது புதிய மருந்துகளுக்கான மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.



கடந்த ஆண்டு முதல் இத்தகைய ஆய்வுகளுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு மட்டும் மருந்துச் சோதனை வழியாக 20 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அந்நிய செலாவணி வந்து குவிந்துள்ளதாகக் கணக்கு காட்டும் நிதித்துறை, 2010ஆம் ஆண்டுக்குள் இதனை 50 கோடி டாலராக உயர்த்தப் போவதாகக் கூறுகிறது.



இதை வேறு வார்த்தைகளில் சொன்னால், சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தப்படும் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது என்பதுதான்!

· செல்வம்

புதிய ஜனநாயகம் October

Monday, October 20, 2008

பிஞ்சுகளைக் குதறும் வெறியர்கள்.. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.



· தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.


· போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.


· தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.


· கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர், அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.


· சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.


· நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.


· மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
· ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.


···


முதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.


பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.


இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.


இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.


செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.


பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் "மானாட மயிலாட' நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் "தொடர்'களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.


பார்த்து இரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், ஆண் பெண் உறவையும் சீனப் பெருஞ்சுவரால் பிரித்திருக்கின்றது. சக மனிதனுடனேயே சாதிபார்த்து பழகும்போது காமத்திற்கு வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.


இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் காதலே மறுக்கப்பட்டிருப்பதால், பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. பாலுணர்வு எனும் இயற்கையான உணர்வு திருட்டுத்தனமான விசயமாகப் பார்க்கப்படுகின்றது. நடுத்தர வயதை எட்டிவிட்டால், காமத்தைக் குற்றமாகக் கருதி மறைத்துக் கொள்ளும் போலித்தனமும், காதலில் சுதந்திரமாக இணைவதற்கு சாத்தியங்கள் மறுக்கப்படுவதும் குறுக்கு வழிகளை நோக்கி மனத்தைத் தூண்டுகின்றன.


மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.
இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.


இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.


அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.


விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் காமக்களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.


உலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.


இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.


இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், "இவையெல்லாம் சகஜம்தான் போலும்' என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.


செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.


தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.


கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.


பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.


பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.


சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.


குழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.


ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.


ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.


விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.


பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.


பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.


ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.


பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.


இவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.


முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.


நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.


· இளநம்பி

புதிய கலாச்சாரம் October

Tuesday, October 14, 2008

நூல் அறிமுகம் : இளமையின் கீதம்

சீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வலது மற்றும் இடது திசை விலகல்களுக்கெதிராக தன்னைப் புனரமைக்க பெருமுயற்சி செய்து வந்தது. இந்தப் பிண்ணனியில், வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் புடம் போடப்படுவதற்கு முன்வந்த சீன இளைஞர்களின் வரலாற்றுச் சித்திரமே இந்நாவல்.



1931 இல் சீனாவின் வடகிழக்கு மாநிலங்களை ஜப்பான் ஆக்கிரமித்தது. அப்போது சீனாவை ஆண்டு கொண்டிருந்த சியாங்கே ஷேக் எனும் பிற்போக்கு ஆட்சியாளன், ஜப்பானுடனான போரில் தோல்வியடைந்து பின்வாங்கினான். தேசத்தைச் சூழ்ந்திருந்த இவ்விரண்டு அபாயங்களையும் எதிர்த்து, தேசப்பற்றுமிக்க இளைஞர்கள் போராடினார்கள். இதன் முத்தாய்ப்பாக, கம்யூனிஸ்ட் கட்சி 1935 டிசம்பர் 16இல் பீகிங் நகரத்தில் மாபெரும் அரசியல் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் அரசியல் அரங்கிலும், கட்சியின் தளத்திலும், தனி மனிதர்களுக்குள்ளேயும் நடந்த போராட்டங்களின் உயிர்த் துடிப்பான பதிவே இந்நாவல். இப்போராட்டங்களினூடாக, மனித குலம் இதுவரை கண்டும், கேட்டும் இராத, உயர்ந்த, பண்பட்ட வார்ப்புகளாக பல கம்யூனிஸ்ட்டுகள் உருவானதன் இரத்தமும், தசையுமான வரலாறு இது.



கதையின் நாயகர்கள் எவரும், "பிறவி நாயகர்கள்' அல்ல; காலத்தை எதிர்கொண்ட விதத்தினாலேயே நாயகர்களாக மாறியவர்கள்; புதிய ஜனநாயகப் புரட்சியின் ஒரு கண்ணியாக தங்களை நிலைநிறுத்தியதன் மூலம், நாயகர்களாக உயர்த்தப்பட்டவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிமுகமாகும் நிலப்பிரபுத்துவ பின்னணி, சிறு முதலாளியப் பின்னணி, அறிவு ஜீவிகள், ஆலைத் தொழிலாளிகள், கூலி விவசாயிகள், சிறு உடமையாளர்கள் போன்ற பல வர்க்கத்தினரும், பாட்டாளி வர்க்கமாக பட்டை தீட்டப் பட, சமூக நடைமுறை வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதில் அவர்களது தடுமாற்றம்; அதனைக் களைவதற்கான போராட்டம்; போராட்டத்தில் வெற்றி, தோல்வி; மீண்டும் போராடுவது ... என இவர்களது அரசியல் போராட்ட வாழ்க்கை நீள்கிறது; வழிதவறிப் போனவர்களும் இதில் உண்டு.



கார்க்கியின் "தாய்' நாவல், ஒரு அரசியலற்ற தாயின் சமூக அக்கறையினூடாக, அவள் அரசியல்படுத்தப்படுவதை விளக்குகிறது. யாங்மோவின் "இளமையின் கீதமோ', ஒரு பிற்போக்கு நிலவுடமைச் சமூகத்தின், ஆசை நாயகி ஒருத்தியின் மகளான டாவோசிங்கின் எளிய தேசப்பற்று, அவளைக் கம்யூனிஸ்ட் கட்சி தோழராக மாற்றிய வரலாற்றுக் கட்டத்தையே விளக்குகிறது எனலாம்.



கட்டாயத் திருமணத்திலிருந்து தப்பித்து, கிராமப்புற பள்ளி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள் டாவோசிங். ஒரு நிலப்பிரபுவிற்கு ஆசை நாயகியாக அவளை மாற்றத் துடிக்கும் உறவினர்களை எதிர்த்துக் கொண்டு, அவளைக் காதலிக்கிறான் பல்கலைக் கழக மாணவனான யூ யூங்சே. அவனுடன் நகரத்திற்கு வந்த பிறகு, ஒரு புத்தாண்டு விருந்தில் அவளுக்கு கம்யூனிச அறிமுகம் கிடைக்கிறது. லூ சியாசுவான் என்ற தோழர் அவளுக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.



அதன் பிறகு கட்சிக்காக ஆசிரியராகிறாள்; கிராமங்களுக்கு செல்கிறாள்; உளவாளியாகச் செயல்படுகிறாள்; அடக்குமுறைக் காலங்களில் அஞ்சாமல் வேலை செய்கிறாள்; கைதாகி சிறைப்படுகிறாள்; இறுதியில் டிசம்பர் 16 ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்களை அணிதிரட்டுகிறாள். ஒரு எளிமையான கிராமத்துப் பெண் படிப்படியாக போராளியாக மாற்றப்படுவதன் தருணங்களை நாவல் படம் பிடித்துக் காட்டுகிறது. கூடவே பல தோழர்களின் உயிர்த்துடிப்பான வாழ்க்கைகளையும் அறிகிறோம்.



கோமிண்டாங் போலீசிடம் பிடிபட்ட லூ சியாசுவான், தன் மீதான சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டு, பிற தோழர்களுக்கு ஆபத்து எனத் தெரிந்தவுடன் துடித்துப் போய், கட்சிக்கு தகவல் அனுப்ப முயல்கிறார். அவர் மடிந்தாலும், தோழர்கள் காப்பாற்றப் படுகிறார்கள். லீவெய் என்ற தோழர், உற்சாகத்துடன் விளையாடச் செல்லும் விளையாட்டு வீரனைப் போல மற்றவர்களிடம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, கைகுலுக்கி விட்டு, தூக்குமேடைக்குச் செல்கிறார்.



புரட்சிகர இயக்கமோ கம்யூனிசமோ, பலருக்கு இது போன்ற பரவசமூட்டும் தருணங்களில்தான் அறிமுகமாகிறது. இந்நிகழ்ச்சிகளையும், மனிதர்களையும் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் சிலர். பலருக்கு இத்தியாகம், நம்பிக்கையூட்டி கிளர்ச்சியூட்டுகிறது. வாசகர்களுக்கு இந்த எழுச்சி உணர்வு தொடர்ந்து இருக்க வேண்டுமானால், அவர்கள் தம்மை கதாபாத்திரமாக மாற்ற வேண்டியுள்ளது. அதாவது புரட்சிகர நடைமுறையில் இறங்க வேண்டியுள்ளது.



புதிய ஜனநாயகப் புரட்சிதான் தீர்வு என்பதை ஏற்றுக் கொண்டாலும், இன்றைய சமூக அமைப்பு அளிக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி தான்மட்டும் தப்பித்துக் கொள்ளலாம், எனக் கருதுபவர்கள் இன்று மட்டுமல்ல, அன்றைய சீனத்திலும் இருந்தார்கள். நடுத்தர வர்க்கத்தின் இத்தகைய சிந்தனைக்கு நாவலில் வகை மாதிரியாக வருபவன் சூநிங். இந்த அநீதியான பறிக்கப்பட்ட வாய்ப்புக்களை உதறிவிட்டு கம்யூனிஸ்ட்டாக மாறுபவர்களுக்கு எடுத்துக்காட்டாக அவனது நண்பனான லோ டாஃபாங்கைக் கூறலாம்.



தாயின் பாசம், காதல், படிப்பு ஆகியவற்றுக்காக செஞ்சேனைக்கு செல்லும் தனது முடிவிலிருந்து பின் வாங்குகிறார் சூநிங். அவனது நண்பனும், கட்சித் தோழனுமான லோ டாஃபாங், ஒரு நிலப்பிரபுவின் மகன்; அவனது தந்தை நான்கிங் நகரத்தில் அரச பதவிக்கு வர இருக்கிறார்; இந்நிலையில் கட்சி ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறது. மற்றவர்களை அணிதிரட்டும் சூநிங், தான் மட்டும் கலந்து கொள்ளாமல் நழுவுகிறான். தலைமறைவாக இருக்க வேண்டிய லோ டாஃபாங் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு பெண் தோழர்களைக் காப்பதற்காகக் களத்தில் இறங்கிச் சண்டையிடுகிறான். பின்பு வட கிழக்குப் போர்முனைக்கும் விரைகிறான். இருவரும் நண்பர்கள்தான் என்றாலும், நடைமுறையில் தோழர்களாக செயல்படுவதில் வேறுபடுகிறார்கள்.



நடைமுறை வேலைகளில் தோய்த்துப் பார்க்காத எவரும் எவ்வளவுதான் மார்க்சிய லெனினியத்தைக் கற்றுத் தேர்ந்தாலும் அற்பக் காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகத்தான் நேரிடும். அவர்கள் கோடிக்கணக்கான மக்களின் விடுதலையைத் தீர்மானிக்க உதவும் சித்தாந்தத்தை, தமது சுயநலனுக்காக கைவிடுவார்கள். அவர்கள் தலைவர்களாக அமையும் போது, தமது தவறையே ஒரு சித்தாந்தமாக நியாயப்படுத்துகின்றனர். மேல் கமிட்டி தோழராக வரும் தய் யூ அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சாகசவாதத்தை முன்வைத்த லிலிசான் பிரிவைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர். ஆரம்பத்தில் சாகசவாதத்தை கிளர்ச்சியூட்டும் முறையில் பேசுபவர், இறுதியில் எதிரியின் உபசரிப்பில் மயங்கி கட்சிக்குத் துரோகமிழைக்கிறார். ஒரே மூச்சில் புரட்சி, இல்லையேல் வீழ்ச்சி என்று இரு கடைக் கோடிகளுக்கும் செல்லும் இவர்களைத்தான், இடது சந்தர்ப்பவாதிகள் என்று லெனின் அழைக்கிறார்.



முப்பதுகளில் சில மாதங்களே தலைமையில் இருந்த லிலிசான் சாகசப் பிரிவைப் பரிசீலித்து, விமர்சிக்கத் தவறியதால், கோமிண்டாங் அரசு கட்டவிழ்த்து விட்ட வெள்ளைப் பயங்கரவாதத்திற்கு கட்சி ஆட்பட நேர்ந்தது. இதனால் "நெடும் பயணம்' என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்ட இடப்பெயர்வின் மூலம், கட்சி தனது மிச்சமிருக்கும் உறுப்பினர்களைக் காப்பாற்றியது. நெடும் பயணத்தின் மத்தியில் 1935 ஜனவரியில் நடந்த சுன்யீ மாநாட்டில் கட்சி தனது தவறான பாதை குறித்து சுயவிமரிசனம் செய்து கொண்டது. பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சியே தன்னை சுயவிமரிசனம் செய்து கொள்ளும் போது, தனிப்பட்ட அறிவாளிகளோ தன்னை முன்னிறுத்தி தவறுகளை சுயவிமரிசனம் செய்ய மறுக்கின்றனர். முன்னாள் தோழரும் நடிகையாக மாறியவருமான பய் லீபிங் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.



""கம்யூனிசம்கிறது கெட்ட விஷயமில்ல; தத்துவ ரீதியா அது ரொம்ப தெளிவில்லாதது; வெற்றியோ ரொம்ப தூரத்தில் இருக்குது... அது தவிர நீ கைது செய்யப்படலாம்; உன்னோட தலை துண்டிக்கப்படலாம்கிற அபாயத்துல எப்பவும் இருக்க! இதிலிருந்து தப்பிக்க ஒனக்கு ஓரளவு அதிர்ஷ்டம் இருந்தாலும், கடுமையான ஒழுக்கத்தோட இருக்கணும்; நிபந்தனையில்லாம தலைமைக்குக் கட்டுப்படணும்; அதனாலதான் நான் அதிலிருந்தெல்லாம் வெளியேறிட்டேன்'' என டாவோசிங்கிடம் "அறிவுரை' கூறுவாள் பய் லீபிங். காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் என்று பல்வேறு பெயர்களில் இருக்கும் தனது சொந்த வாழ்க்கை சுயநலங்களைப் புனிதப்படுத்துவதற்கு, முன்னாள் கம்யூனிஸ்ட்டுகள் வைக்கும் இவ்வுலகளாவிய வாதத்தை தமிழகத்தின் பல அறிவு ஜீவிகளிடமும் காண்கிறோம். சுயநலத்திற்கு தேசப் பிரிவினை ஏது?



பய் லீபிங் மீதான காதல்தான் சூநிங்கை செஞ்சேனைக்கு செல்வதிலிருந்து விலக வைத்தது. அன்று மாலையே கோமிண்டாங் இராணுவம் அவனைக் கைது செய்துவிடும். சிறை வாழ்வும், அங்கு கண்டறிந்த தோழர்களின் அர்ப்பணிப்பும், தியாக உணர்வும் அவனைத் தோழராகப் பட்டை தீட்டுகிறது. சுயநலம் மிகுந்த பய் லீபிங்கின் அழகை விட, அனைவருக்கும் விடுதலையைத் தரப்போகும் கம்யூனிசத்தின் அழகு, அவனை செஞ்சேனையில் கொண்டு சேர்ப்பதற்குக் காரணமாக அமைகிறது.


நிலப்பிரபுக்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் யூ யூங்சேவை முதலில் காதலிக்கிறாள் டாவோசிங். இந்த முதல் செயலுக்கு மேல், அவனது முற்போக்கு முடிந்து விடுகிறது. கட்சியில் சேர்ந்து தோழராக வேலை செய்யும் டாவோசிங்கை முதலில் நாசூக்காகவும், பின்பு நேரடியாகவும் கண்டிக்கிறான் யூ யூங்சே. இதற்கு மேல் இங்கு காதலுக்கு இடமில்லை என்பதால், அவனை விட்டு விலகுகிறாள் டாவோசிங். இதே போல தய்யூ ஒரு துரோகி எனத் தெரிந்தவுடன் அவனுடனான காதலைத் துறக்கிறாள் டாவோசிங்கின் தோழியான சியாவோயென்.



இப்படித்தான் கம்யூனிஸ்டுகளின் காதலில் சமூக உணர்வு மட்டுமே அளவு கோலாகிறது. வேறெந்த சித்தாந்தங்களை வைத்திருப்பவர்கள் எவரும், இப்படிக் குடும்ப வாழ்வில் முரண்படுவதில்லை. தோழர்கள் மட்டும்தான், தனது சமூக விழுமியங்களை குடும்பத்திலும் கொண்டு வரப் போராடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் "மகிழ்ச்சியான' குடும்ப வாழ்க்கை அமைவதில்லை. ஆனால் ஊரையும் வீட்டையும் திருத்தும் இத்தகைய போராட்டங்களில்தான், அவர்களது உண்மையான மகிழ்ச்சி வெளிப்படுகிறது.



தனது மனைவி டாவோசிங் தோழராக மாறியதால், தனது குடும்பத்தின் இன்பம் மறைந்து விட்டதாக யூ யூங்சே, தனது நண்பனான லூ சியாசுவான் எனும் கட்சித் தோழருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை: ""சில கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததன் மூலம் என் மனைவியின் மனதை நீ ரொம்பவும் கெடுத்து விட்டிருப்பதை நான் காண்கிறேன். அவள் உனது ஆணைப்படியே செயல்படுகிறாள். எப்போது பார்த்தாலும் ""புரட்சி'', ""போராட்டம்'' என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறாள். மிக மோசமான முறையில் எங்கள் குடும்ப மகிழ்ச்சி மறைந்து விட்டது. நீ உன் விருப்பம் போல் நடந்து கொள்ளலாம் என்றாலும் எனது துன்பத்தில் நீ இன்பம் காண்பதும், எனது அவலத்தில் நீ உனது வாய்ப்பை வளர்த்துக் கொள்வதும் எவ்வளவு வருந்தத்தக்கது.... ஒவ்வொருவருக்கும் ஒரு நீதிநெறி இருக்க வேண்டும்....''.



யூ யூங்சேயைப் பிரிந்து தோழராக வேலை செய்யும் டாவோ சிங்கிற்கு லூ சியாசுவானின் தோழமையுடன் கூடிய ஆளுமை, ஒரு மெல்லிய காதலைத் தோற்றுவிக்கிறது. மரணத்திற்கு முந்தைய சிறைக் கொட்டடியில் இருக்கும் லூ சியாசுவான், டாவோசிங்கிற்கு கடிதம் எழுதுகிறார். ""கடந்த ஆண்டுகளில் கொடுஞ்சிறையில் இருந்த போது உலகின் மிக முன்னேறிய வர்க்கத்தின் போராளியாக நீ மாறிவிடுவாய் என்று நான் முன்னோக்கிப் பார்த்தேன். புரட்சியை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவராகவும் இருப்பாய் தோழரே. வெற்றியின் நேரத்தை விரைவுபடுத்துவதற்காக, ஒவ்வொரு நாளும் கம்யூனிஸ்டுகள் இரத்தம் சிந்துகிறார்கள்; உயிர்த்தியாகம் செய்கிறார்கள். .... அன்புத் தோழரே, அன்பு டாவோசிங், எனது முறை விரைவிலே வரக்கூடும்...''



இரண்டு கடிதங்களுக்குமிடையில்தான் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தில் எவ்வளவு வேறுபாடுகள்! தேசத்தின் விடுதலைக்கான முயற்சியால் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சி மறைந்து விட்டது என்று புலம்புகிறது ஒரு கடிதம். இன்னொரு கடிதமோ தான் கொல்லப்பட்டாலும் தன் காதலி போராட்டத்தை தொடர்ந்து செய்யவேண்டும் என்று கம்பீரமாக விரும்புகிறது. மக்களது விடுதலை என்ற எதிர்காலக் கனவுக்காக, நிகழ்காலத்தின் துயரங்களை புன்சிரிப்புடன் ஏற்றுக்கொள்ளும் கம்யூனிஸ்ட்டுகள், மனித வாழ்க்கையின் முழுமையைத் தங்களது வாழ்க்கையில் அடைகிறார்கள்.



""இருளைவிட ஒளி வலிமையானது; அற்ப குணத்தை விட பெருந்தன்மை வலுவானது; சுயநலத்தை பொதுநலமும், துயரத்தை மகிழ்ச்சியும் வெற்றி கொள்ள வேண்டும். உண்மையான மனிதனாக நாம் வாழவேண்டும். இதையே நான் எனது எழுத்தில் வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்'', எனத் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாவலாசிரியர் யாங் மோ. ஆம், முற்போக்கு, மக்கள் நலன், சமூக அக்கறை, மாற்றம், புரட்சி எனப் பேசுபவர்களைத் தொட்டுத் துரத்தும் முதற்புள்ளி இதுதான். அதுதான் இந்நாவலின் எளிய மாந்தர்களைக்கூட மாபெரும் நிகழ்வுகளைச் சாதிக்கும் போராளிகளாக மாற்றியிருக்கிறது.



தனிநபர்களின் வழியாகவோ அல்லது எந்திரகதியிலான விவரங்கள் அடிப்படையிலோ வரலாற்றை படிக்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். நாவலோ ஒரு உயிர்த்துடிப்பான வரலாற்றுப் பின்னணியில், பல்வேறு வர்க்கப் பின்னணியிலிருந்தும் வரும் மனிதர்களை வைத்து, மனித வாழ்க்கையின் மாறத்துடிக்கும் போராட்டத்தின் காட்சியை ஒரு மாபெரும் ஓவியமாக தீட்டுகிறது.



இந்த ஓவியத்தில் மூழ்கி எழும்போது நாவலின் பாத்திரங்கள் கடந்த காலத்திற்கு மாத்திரம் உரியவர்கள் அல்ல, நிகழ் காலத்தில் நம்மிடையேயும், நமக்குள்ளேயும் அவ்வப்போது எட்டிப் பார்ப்பது தெரிய வருகிறது. 748 பக்கங்களில் விரியும் நாவலைப் படித்து முடித்ததும், நாமும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து வேலை செய்ய மாட்டோமா என்ற ஆவலும் புதிய வாசகருக்கு நிச்சயம் எழும். தோழர்களுக்கோ புரட்சியின் உரைகல்லில் நாம் எங்கு, யாராக, என்னவாக நிற்கிறோம் என்ற நிலைக்கண்ணாடி போல நாவல் காட்டிவிடும்.



"புரட்சி சரியானது; மக்களை அணிதிரட்டவேண்டும்; நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றை ஒழிக்கப் போராட வேண்டும். ஆனால், எனது பிரச்சினை தனியானது. நான் மட்டும் பிழைத்துக் கொள்வேன்; எனது மகிழ்ச்சி இப்போதே கிடைக்கும்; மக்களுக்கோ புரட்சிக்குப் பிறகுதான்' எனக் கருதுவதற்கான வாய்ப்பை அன்றைய சீனத்திலும், இன்றைய இந்தியாவிலும் ரத்து செய்கிறது நாவல்.


·வசந்தன்
புதிய கலாச்சாரம்

Sunday, September 14, 2008

மாரத்தான் வியாபாரத்தில் மாணவன் கொலை!

சென்னையில் ஆகஸ்ட் 31 அன்று மாரத்தான் போட்டியை 'கிவ் லைப்' என்ற அமைப்பு நடத்தியது. கலைஞரின் தற்போதைய டெல்லி வாரிசு கனிமொழி மற்றும் சூர்யா, மாதவன் என நடிகர்களின் படங்களை போட்டும் நகர் முழுவதும் பிரம்மாண்டமாக விளம்பரம் இப்போட்டிக்காக செய்யப்பட்டு இருந்தது. ஏழை குழந்தைகளுக்கு 'கல்வி கொடுப்பதற்காக' என அறிவித்து "ஓடுவதற்கு" பதிவு கட்டணமாக ரூ 100ம், "ஸ்பான்சர்" என பலரிடம் நன்கொடையும் ஆக மொத்தத்தில், இவ்வியாபாரத்தில் கோடிக்கணக்கில் நிதி திரட்டப்பட்டது.

போட்டியன்று ஆற்காடு வீராச்சாமி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கில், கனிமொழி உள்பட பல நடிகர்கள் கொடியசைக்க சுமார் 1.5 லட்சம் பேர் போட்டியில் பங்கேற்றனர். ஆனால் போட்டிக்கு விளம்பரம் செய்தளவில் சிறிதளவு கூட போட்டியில் பங்கேற்க வந்தவர்களின் மருத்துவ உதவிக்கு மருத்துவர்களோ, மருந்து மற்றும் தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால் பலர் மயக்கம் அடைந்து விழுந்தனர். அதில் அண்ணா பல்கலை கழக எம்.எஸ்.சி மாணவன் சந்தோஷ் (22) மிகவும் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் மரணமடைந்தார்.

ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்கப் போவதாக பீற்றிக்கொண்டு இப்போட்டியை நடத்தியவர்கள் தான் கல்வியினை வியாபாரப்பொருளாக மாற்றியவர்கள். இறந்த அந்த மாணவனை அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம், ஆனால் அந்த மருத்துவமனை தனியாருடையவை. அதற்கு பணம் செலுத்துவது யார்?

இப்படி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் தனியார்மயமாக்கிய அயோக்கியர்கள் தான் போட்டிக்கு கொடியசைத்தவர்கள். இதனை மக்கள் உணரும் நேரத்தில் இன்று கொடியசைத்தவர்கள் ஓடிக்கொண்டு இருப்பார்கள்.

தமிழக மின்சாரத் துறைக்கு மின்கட்டணம் செலுத்துவதை நிறுத்துவோம்! பிரச்சார இயக்கம்!!


Tuesday, September 9, 2008

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!

பகத்சிங் இரத்தத்தில் ஒளியாதே!
எந்தக் கவிதை நாம் பாட?
கண்ணில் தெரியும் பூக்களையா!
காலில் குத்தும் முட்களையா?
எந்த மரபை நாம் தேட?



மாமல்லபுரத்துச் சிற்பங்கள்
தரையில் நிழல்விழா தஞ்சைக் கோவில் அற்புதங்கள்
சூளகிரி இசைத் தூண்கள்.... புடைப்புச் சிற்பங்கள்
இப்படி மூளியாய் கிடக்கும் சிலைகளுக்கும்
முன்கதை ஒன்று இருக்கிறது.
ஆனால் கூலியாய் நிலம் பெயர்ந்து
பெங்களூரிலும், கல் குவாரியிலும்
பிய்த்து எறியப்படும் உழைக்கும் மக்களின்
கல்லாய்ச் சமைந்த வாழ்க்கையை
எழுப்புவதற்கான இலக்கியம் எங்கே?
குண்டு குண்டாய் இருக்கும்
கொழுப்பேறிய இலக்கியமெல்லாம்
சுரண்டுபவனின் நக அழுக்கை அல்லவா
விண்டு வைத்து விருந்து படைக்கிறது
கண்டதுண்டா! நீங்கள் கண்டதுண்டா!
நக்சல்பாரிகளின் துண்டறிக்கைகள் அல்லவா
நமது உழைக்கும் மக்களின் குரலை
உயர்த்திப் பிடிக்கிறது
காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அல்லவா
மறுக்கப்பட்ட நம் இலக்கியம் இருக்கிறது!


தருமபுரிக்கு
ஆருயிர் நீட்டிக்கும்
அரும்சுவை நெல்லிக்கனியை
அதியமான் அவ்வையாருக்கு கொடுத்ததா பெருமை?
மக்களின் அரசியல் வாழ்வு நீடிக்க
தம் ஆருயிரையே கொடுத்த
எங்கள் அப்பு, பாலன் தந்த
நக்சல்பாரி பாதையல்லவா பெருமை!


தருமபுரி கரும்புக்கு
சருக்கரை விழுக்காடு அதிகமாம்!
இருக்காதா பின்னே,
கணுக்கணுவாய்
இனிய பாட்டாளி வர்க்கக் கனவுகளை
வேர் இறக்கிய
நக்சல்பாரிகள் மண்ணில்
நட்ட பயிராயிற்றே!


அரசாங்கம் அழகாய் கதைவிடுகிறது
ஈரமற்ற மண்...
சாரமற்ற கலிச்சோறு...
வேலையற்ற மக்கள்...
பின்தங்கிய மாவட்டமாதலால்...
பின்தங்கிய மனநிலையினால்
மக்கள் நக்சல்பாரிகள் ஆகிவிடுகிறார்களாம்!


மடையர்களா!
வேலை இல்லாதவனா புரட்சியாளன்
வெட்டி வேலை செய்பவன் போலீஸ்காரன்.
பின்தங்கிய மனநிலையா புரட்சி?
முன்னேறிய உணர்ச்சி அல்லவா புரட்சி!
முன்னேறிய அறிவு அல்லவா புரட்சி!
முன்னேறிய உழைப்பு அல்லவா நக்சல்பாரி!


கதை முடிக்கப் பார்ப்போரே!
அது முடியாது
நாங்கள் பகத்சிங்கின் தொடர்ச்சி.


சில குழந்தைகளுக்கு
பொம்மைகள் போதும்
அழுகையை நிறுத்திக் கொள்ள
சில குழந்தைகளுக்கோ
அம்மா வேண்டும்!
கிலு கிலுப்பைகளோடு அடங்கிவிடும்
சில குழந்தைகள்.
சில குழந்தைகளுக்கோ தாயின் குரல் வேண்டும்!
வயிறு நிறைந்தால்
தூங்கிவிடும் சில பிள்ளைகள்.
சில பிள்ளைகளுக்கோ அது முடியாது
அடுத்து கதை÷வண்டும்.
அவர்களுக்குச் சொல்லுங்கள்
இந்தக் கதையை...
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஏழõம் ஆண்டு
செப்டம்பர் இருபத்தி எட்டாம் நாள்
ஒரு பஞ்சாப் தாயின் பிரசவ வலி
புதிய இந்தியாவையே ஈன்றெடுத்தது.
கருவறையை விடவும் இருண்டு கிடக்கும்
நாட்டின் நிலைமையை
கர்ப்ப வெப்பத்திலேயே கண்டுணர்ந்து,
தன் மேனியில் வழிவது
தாயின் இரத்தம் மட்டுமல்ல
தாய்நாட்டின் இரத்தம் என்பதை
பார்த்து, பார்த்து
அடிமைத்தனத்தின் பனிக்குடம் உடைத்து
தொப்புள் கொடியின் தாமதம் அறுத்து
பிறப்பின் கலகம்
அங்கே பகத்சிங் என்று பெயரெடுத்தது.
அடிமை இந்தியாவின் தாலாட்டில்
அடங்க மறுத்து, அழுது சிவந்து
அவன் கையும் காலும்
எல்லோர் முகத்திலும் எட்டி உதைத்தது.


வெறும் வயிற்றுப் பசிக்காக
வளர்ந்தவனாய் இருந்திருந்தால்
அம்மா... அப்பா என்று மட்டும்
அழைத்திருப்பான்.
வர்க்கப் பசியோடு வளர்ந்த பகத்சிங்
அ... ம்.... மா, அ... ப்... பா... நாடு என
விரிந்த பொருளில்
பேசத் தொடங்கினான்.


பன்னிரெண்டாம் அகவையில்
பள்ளிக்கூடத்திலிருந்து
யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல்
துள்ளியெழுந்து
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தை
பார்க்கப் போனான்.
அங்கே வெள்ளையன் குதறிய
இந்தியப் பிணங்களை
தன் கண்களில் விதைத்தான்.
கருகிய இரத்தம் இதயத்தில் உறைய
தன் காலத்தை வெறுத்தான்.
சிவந்து கிடக்கும் இந்தியக் கனவையும்
சிதறிக் கிடக்கும் இந்தியப் புரட்சியையும்
ஒன்று சேர்க்கும் உறுதியுடன்
கையில் அள்ளிய களத்தின் மண்ணை
தன் (சட்டைப்) பையில் திணித்தான்!


மண்ணைத் தின்று வளர்ந்தவர்களே!
உங்களில் எத்தனை பேருக்கு
இந்த மண்ணைப் பற்றிய அக்கறை உண்டு?
ணூ வெறும் வீட்டுப் பாடம் போதுமா?
பகத்சிங் போல நாட்டுப்பாடம் படித்தாலே
நல்ல புத்தி வந்து சேரும்.
இல்லையேல்
ஜாலியனாவது... பாக்காவது
அமெரிக்காவின்
கூலி என் பாக்கியம் என்று
சட்டைப் பையில் மட்டுமல்ல
சதைக்குள்ளும் அந்நிய நரகலின்
ஆணவம் ஊரும்.


பகத்சிங்கும் தான் படித்தார்!
""புரட்சி ஒன்றே என் விருப்பப் பாடம்
நாட்டுப்பற்றே உயர்நிலைக் கல்வி
கம்யூனிசமே உயிரியல் படிப்பு''
என்ற விடுதலைக் கல்வியின் வீரியத்தை
விளக்கிச் சொல்லுங்கள் பிள்ளைகளிடம்.
சுயநலம் என்ற தோல் வியாதி
உங்கள் பரம்பரைக்கே தொற்றாது.
"இளமைக்கேற்றவேலை வாய்ப்பு
இந்தியப் புரட்சியில் இருக்குது
அந்நியன் ஆதிக்கம் ஒழிப்பதிலேயே
நம் அனைவர் நலனும் பிறக்குது''
என்று பகத்சிங் சொன்ன கருத்துக்களோடு
பழக விடுங்கள் பிள்ளைகளை.
முதலாளித்துவம் எனும் கெட்ட பழக்கம்
உங்கள் வாரிசுகளுக்கே வராது.
எனக்கு மட்டுமே வாழ்வேன் என்று
இதயத்தை இழுத்து நடக்கும்
"வாதம்' அவர்களுக்கு வராது!
போராடத் தூண்டும் பகத்சிங் வாழ்வு!
பொறாமைப்பட வைக்கும் அவன் சாவு!
கரைக்கப்பட்ட பகத்சிங் சாம்பலால்
உணர்ச்சி பெற்ற சட்லெஜ் நதி இன்றோ...
சகலரையும் சந்தேகத்துடனே பார்க்கிறது.
எதுவுமே செய்ய முன்வராத
இவர்களை நம்பியா செத்தோம்
அச்சத்தில் தியாகிகள் கனவு உறைகிறது!
இவர்களை நம்பியா இருக்கிறோம்
பீதியில் இயற்கை நடுங்கித் தவிக்கிறது!


சும்மா பகத்சிங் பற்றி பேசாதே!
அவன் பேசவிரும்பியதைப் பேசு
சும்மா தியாகிகள் இரத்தத்தில் ஒளியாதே!
அவர்கள் தெரிவு செய்த பாதைக்கு
வேலை செய்ய வெளியே வா!
அழைக்கிறது புரட்சி நதி!



(29.9.2006 அன்று தருமபுரி பெண்ணாகரத்தில் நடைபெற்ற பகத்சிங் 100ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் - கவியரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)

துரை சண்முகம்

Saturday, August 23, 2008

சட்டபூர்வமாகி வரும் கட்டணக் கொள்ளை

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''இந்த ஆண்டு முதல் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணம் ரூ.32,500இல் இருந்து ரூ. 62,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது'' என்று கடந்த ஜூன் 6ஆம் தேதி அறிவித்தார்.


கல்வி வியாபாரிகளோ இந்தக் கட்டண உயர்வு தாங்கள் எதிர்பார்த்ததை விட 25,000 ருபாய் குறைவானது என்று ஒப்பாரி வைக்கின்றனர். கட்டண உயர்வு குறித்து ஆராய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பாலசுப்பிரமணியன் கமிட்டி, கட்டணத்தை உயர்த்துவது குறித்து கல்வியாளர்களிடமும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்டு, அதன்படி நடந்ததாகக் கூறுகிறார் பொன்முடி. இந்தக் கமிட்டியிடம் எந்தப் பொதுமக்கள், கல்வியாளர்கள் கட்டணத்தை உயர்த்தக் கோரினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.


கடந்த ஆண்டு நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் ரூ.32,500 கட்டணமாகப் பெற்று பெற்று கல்வி வியாபாரிகள் சம்பாதித்தது மட்டும் 180 கோடி ரூபாய் என்கிறார்கள். இது வெறுமனே கணக்குக் காட்ட மட்டுமே. ஆனால் உண்மையில் ஒரு சீட்டிற்கு ரூ. 2.5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கட்டாய நன்கொடையாகவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை கல்விக் கட்டணமாகவும் வசூலிக்கிறார்கள்.


கல்லூரிகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூச்சலிடவே, சென்ற ஆண்டு 18 கல்லூரிகளிலும் அதன் நிர்வாகிகளின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசு. தனது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளிடம், ''என்ன, இப்போது வந்திருக்கிறீர்கள், அட்மிசன் டயத்தில் வந்திருந்தால் இன்னும் அதிகமாகக் கிடைத்திருக்குமே!'' என்று ஜேப்பியார் நக்கலாகக் கூறினாராம். அந்தச் சோதனைக்குப் பின்னர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.


பொறியியல் கல்லூரி கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வந்தவுடன் டாக்டர் ராமதாஸ் ''இந்த அநியாயத்தைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்துவோம். சுயநிதிக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று பொன்முடிக்கு எதிராக அறிக்கைப் போரைத் தொடங்கினார்.


ஆனால், ராமதாசின் கட்சித் தலைவர் கோ.க.மணிதான், கட்டணத்தை நிர்ணயிப்பது பற்றி மார்ச் மாதம் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு கையெ ழுத்தும் போட்டவர். இதைக் குறிப்பிட்ட கருணாநிதி, ''இக்கட்டண உயர்வானது, பொறியியல் கல்லூரிகளில் சட்டவிரோதமாக வசூலித்துவரும் நன்கொடையைக் கட்டுப்படுத்தவே கொண்டு வரப்பட்டது'' என்று நியாயப்படுத்தினார்.


காங்கிரசுக் கட்சிக்கு சென்ற மாதம் வரை தலைவராக இருந்த ராமதாசின் சம்பந்தி கிருஷ்ணசாமி, ''காமராஜர் இருந்திருந்தால் கல்விக் கட்டண உயர்வுக்காகக் கண்ணீர் வடித்திருப்பார்'' என்று அறிக்கை விட்டார். ஆனால் அதே காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித்தலைவர் சுதர்சனம் தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்டண உயர்வுக்காகக் குரல் கொடுத்தவர். ஏனென்றால், சுதர்சனம் பல பொறியியல் கல்லூரிகளுக்கு அதிபர்.


சி.பி.எம்.மின் இந்திய மாணவர் சங்கப் பொதுச் செயலாளர் செல்வா , ''கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பு கல்லூரிகளை மூன்று வகையாக இனம் பிரித்துக் கட்டணத்தை அறிவிக்கலாம்'' என்றார். உயர்கல்வி விற்பனைச் சரக்காக ஆக்கப்பட்டுள்ளதை எதிர்த்துப் போராடாமல், வகை பிரித்து வசூலிக்கக் கோருகிறார்கள், போலி கம்யூனிஸ்டுகள். இக்கட்சியின் இளைஞர் அமைப்பின் ''டைபி இளைஞர் முழக்கம்'' பத்திரிகைக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விளம்பரம் தரும் சுயநிதிக் கல்லூரிகளின் முதலாளிகளுக்கு எதிராகவா, இவர்கள் போராடப் போகிறார்கள்?


சி.பி.ஐ.யின் சென்னை மாவட்ட செயலாளர் வீரபாண்டியன், ''ஏழை மாணவர்களைப் பாதிக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டால் போராட்டத்தில் இறங்குவோம்'' என்கிறார். யாருக்கு எதிராக? சி.பி.ஐ. அலுவலகத்துக்குக் கணிப்பொறிகளை அன்பளிப்பாகத் தந்த "கல்வி வள்ளல்' ஜேப்பியாருக்கு எதிராகவா?


இந்தக் கட்டண உயர்வால் மாணவர்களில் 70 சதவீதம் பேர் கடனாளி ஆவார்கள். கந்துவட்டிக் கடன், விவசாயக் கடன் போல ஏழைகளுக்கு வங்கிகள் தரும் கல்விக்கடனால் அல்லல்படுவார்கள் என்று ராமதாசு சொல்வது உண்மைதான். ஆனால் அவர் யாரை எதிர்த்துப் போராடுவாராம்? தனது மாநாடுகளுக்கு இலவச வாகன வசதி செய்து தரும் ''தருமபிரபு'' ஜேப்பியாரை எதிர்த்தா?


அரசு, கல்வி முதலாளிகளுக்கு மேலும் ஒரு சலுகையாக பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் 5ஐ அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் குறைத்துள்ளது. எதற்காகவாம்? நிறைய மாணவர்கள் பொறியாளர்களாகிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்கா? இல்லை; சென்ற ஆண்டு 14 ஆயிரம் சீட்டுகள் விற்பனையாகாமல் தொழில் நட்டமாகி விட்டதாகக் கல்வித் தந்தைகளின் அழு குரல் கேட்டுத்தான் பொன்முடி இவ்வாறு அறிவித்தார்.


தனியார் பொறியியல் கல்லூரிகள், இலட்சக்கணக்கில் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு தரமான கல்வியைத் தருவதும் இல்லை. பல கல்லூரிகளில் ஆய்வகங்களோ, நூலகங்களோ கிடையாது. தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் கிடையாது. இக்கல்லூரிகளில் படித்து முடித்து விட்டு வெளியே வரும் மாணவர்களில் 30 சதவீதம் பேருக்கு மட்டுமே பொறியியல் திறன் உள்ளதாகக் கூறுகிறார், தனியார் வேலைவாய்ப்பகமான ''மாஃபா''வின் தலைவர் பாண்டியராஜன்.


இதுவொருபுறமிருக்க, தமிழக மாணவர்களின் தலையில் இடியை இறக்கியதைப் போல, சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரி உள்ளிட்ட சில அரசுக் கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களாக ஆக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு கல்லூரிகளைப் பல்கலைக்கழகங்களுடன் இணைத்ததை மாணவர்களுடன் சேர்ந்து கண்டித்துக் குரல் கொடுத்தவர் மு.க. என்பது நம் நினைவில் ஆடிவிட்டுப் போகிறது. அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக ஆக்கப்படும் பொழுது, அதன் தரம் உயருகிறதோ இல்லையோ, நிச்சயம் கல்விக் கட்டணம் உயர்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது.


மேல் மருவத்தூர் அம்மா, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நடத்தும் நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், சவீதா பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில தனியாருக்கு இந்தக் கல்வியாண்டில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கிக் கொள்ள மைய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; மைய அமைச்சர் ரகுபதி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில கல்வி முதலாளிகள் மருத்துவக் கல்லூரி அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


கிராமப்புற மருத்துவ சேவை கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராட்டம் நடத்திய தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவக் கல்வியில் தனியார் புற்றீசல் போல நுழைந்திருப்பதைக் கண்டு கோபம் கொள்ளவில்லை. இந்த மௌனத்தைக் கோழைத்தனம் என்பதா, இல்லை காரியவாதம் என்பதா?


முதலாளித்துவம் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் கூட கல்வியில் 22 சதவீதம்தான் தனியார்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உயர்கல்வியில் 96 சதவீதம் தனியாருக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.


தமிழக மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே கல்லூரிகளைத் திறந்து நடத்தி வரும் தனியார் முதலாளிகளின் ஆதிக்கம், ஆரம்பக் கல்வி தொடங்கி உயர்கல்வி வரை அனைத்து நிலைகளிலும் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், ஏழைகளுக்கு உயர்கல்வி மட்டுமல்ல, பள்ளிக்கல்விகூட எட்டாக் கனியாகிவிடும்.


· அழகு
புதிய ஜனநாயகம் - 2008

Friday, August 22, 2008

வென்றது மாணவர் போராட்டம்! வீழ்ந்தது கல்லூரி முதல்வர் கொட்டம்!

கடலூரில், பெண்களுக்காக இயங்கும் ஒரே கல்லூரியாக, பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி உள்ளது. தொன்மை வாய்ந்த இக்கல்லூரியில் தொடக்கத்தில் 400500 பேராக இருந்த மாணவிகளின் எண்ணிக்கை, தற்போது 2000 பேராக உயர்ந்துள்ளது. இதற்கேற்ப இக்கல்லூரியில் அடிப்படை வசதி மற்றும் போதிய அளவுக்குப் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இல்லை. இதுபற்றி மாணவிகளும், ஆசிரியர்களும் கல்லூரி முதல்வரிடம் பலமுறை முறையிட்டு, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வப்போது போராடியும் கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


மேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவிகளிடம் கட்டாய நன்கொடை பெறுவதோடு, மேசைநாற்காலி என அன்பளிப்புகளைத் தரச் சொல்லி கல்லூரி முதல்வர் வள்ளி கொட்டமடித்து வந்தார். சாதியத் திமிர் பிடித்த இவர், தாழ்த்தப்பட்ட பிற்பட்ட மாணவிகளை இழிவுபடுத்துவதோடு, தன்னை செட்டிநாட்டு ஜமீன் பரம்பரை என்றும், "அண்ணன்' மு.க. அழகிரிக்கு நெருக்கமானவர் என்றும், தன்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்றும் கொக்கரித்துக் கொண்டிருந்தார்.


இந்நிலையில், இவ்வாண்டு மாணவர் சேர்க்கையின் போதும் முதல்வர் வள்ளி தனது அடாவடி வசூல் வேட்டையைத் தொடங்கியதும், இவரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், அடிப்படை வசதி மற்றும் பேராசிரியர்களை நியமிக்கக் கோரியும் மாணவிகளும் சில பேராசிரியர்களும் போராட முனைந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த முதல்வர் வள்ளி, தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஐயப்பன் மற்றும் அடியாட்களைக் கொண்டு மிரட்டிப் போராட்டத்தை ஒடுக்க முயன்றார்.


இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் மாணவிகளும் ஆசிரியைகளும் உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரதம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் என போராட்டத்தைத் தொடர்ந்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவாகத் துணைநின்ற புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, இந்நியாயமான போராட்டத்தை மக்களிடம் விளக்கிப் பிரச்சாரம் செய்ததோடு, முதல்வர் வள்ளியின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி சுவரொட்டி பிரச்சார இயக்கத்தையும் மேற்கொண்டது. போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல, போராடும் மாணவிகளுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் அளித்து ஊக்கப்படுத்தியது.


பு.மா.இ.மு.வின் வழிகாட்டுதலின்படி, கடந்த 14.7.08 அன்று 500க்கும் மேற்பட்ட மாணவிகள் அணிதிரண்டு கடலூர்விழுப்புரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். மாணவிகளின் போர்க்குணமிக்க இப்போராட்டத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு பொதுமக்கள் பெருந்திரளாகக் குழுமினர். அரண்டுபோன போலீசும் கல்லூரி நிர்வாகமும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாக வாக்களித்து, முதல்வர் வள்ளிக்கு இரண்டு மாத காலத்துக்குக் கட்டாய விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது.


ஐக்கியப்பட்ட, போர்க்குணமிக்கப் போராட்டத்தால் மட்டுமே கல்விக் கொள்ளையர்களின் கொட்டத்தை ஒடுக்க முடியும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ள மாணவிகள், இம்முதற்கட்ட வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள, அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.


— புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்.

Tuesday, July 15, 2008

அன்பார்ந்த பள்ளி-கல்லூரி மாணவர்களே!

  • அரசு கல்விக் கட்டணம் இல்லங்குது
    அப்பறம் பி.டி.ஏ மூலமா கொள்ளையடிக்குது!
  • கல்வி கொடுத்த கவர்மெண்டு
    டாஸ்மாக் சாராயத்தை விற்குது!
    கள்ளச்சாராய ரவுடிகளெல்லாம் கல்வியை விற்குறான்!
    இனியும் ஒதுங்கிச் செல்வது அவமானம்!
    ஓங்கி குரலெழுப்புவதே தன்மானம்!
  • படிக்க வகுப்பு இல்ல
    பாடம் நடத்த வாத்தியார் இல்ல
    குடிக்கக் கூட தண்ணி இல்ல
    அடிப்படை பிரச்சனையை
    தீர்த்து வைக்க வக்கில்லாமல்
    'அனைவருக்கும் கல்வி' என்று
    ஆளுகிறவங்க பேசுவது அத்தனையும் ஏமாற்று!
    பு.மா,இ.மு தலைமையிலான போராட்டமே ஒரே மாற்று!
  • செமஸ்டர் வந்தது! தேர்வு இரண்டு முறையானது!
    பாக்கெட் பணமோ பறிபோகுது!
  • சிப்டு முறை வந்தது! நேரம் மட்டுமே மாறுது!
    புதுசா வாத்தியாரும் போடல! அடிப்படை பிரச்சனைளும் தீரல!
  • ஜனநாயகம் என்று சொல்லி கவுன்சிலிங் நடக்குது!
    ஜனநாயகத்தை கொடுக்கின்ற
    கல்லூரித் தேர்தல் எங்கே போனது!
  • கல்லூரியைக் கை கழுவது
    கல்வி வியாபாரத்தை கொழுக்க வைக்க
    அரசு பல்கலைக்கழகமா மாற்றுது!
    இதுவரை நீ.படித்து வந்த
    பி.ஏ.,பி.எஸ்.சியும் பறிபோகுது!
  • எப்படியும் எதிர்காலம் உண்டென்பது பகற்கனவு!
    இதற்கெதிராக போராட வேண்டுமென்பதே
    பகத்சிங் கண்ட கனவு
    இன்றே பு.மா.இ.மு-வில் இணைந்திடு!
    உரிமைக்கான போராட்டத்தை தொடங்கிடு!!

அன்பார்ந்த இளைஞர்களே!

  • குடிக்கத் தண்ணி இல்ல!
    குப்பவாரத் துப்பில்ல!
    குடலைப் பிடுங்கும் கால்வாய் நாற்றம் தீரல!
    குண்டும் குழியுமான சாலை இன்னும் மாறல!
    விளையாடக்கூட ஒரு இடம் இல்ல!
    உடற்பயிற்சி கூடமும் இல்ல!
    ஊருக்கொரு டாஸ்மாக் சாராயக்கடைய
    உன்னைச் சீரழிக்க திறந்திருக்கு
    இதை கண்டுகொள்ளாத ஊராட்சி
    வரியை மட்டும் போடுது!
    ஊரையே கொள்ளை அடிக்குது!
    ஊமையாக இருப்பது அவமானம்!
    உரத்த குரலெழுப்புவதே தன்மானம்!
  • இளைஞனே! ஒ இளைஞனே!
    பெயருக்குப் பின்னால் பி.ஏ., எம்.ஏ., பட்டம்!
    ஆள் எடுக்க அரசு போட்டது தடைச்சட்டம்!
    ஆண்டுக்கு 100 நாள் வேலை கொடுக்க திட்டம்!
    வேலை கிடைக்குமுன்னு போனா
    அன்று சோற்றுக்கே திண்டாட்டம்!
  • சுயதொழில் தொடங்க டி.வி, எஃப்.எம்-ல்
    அதிகாரி ஆலோசனையால் சிறுமுதலீடு கேட்டுப்போக
    சிபாரிசு கேட்டு வங்கி சித்ரவதை செய்யுது!
  • கலெக்சன், கடன் கொடுக்கும் வேலைன்னு
    வங்கிகளைத் தேடி அலையற
    ஃபோர்டு, ஹீண்டாய், நோக்கியோல
    வேலை கிடைக்குமுன்னு நெனைக்கிற
    கிடைச்சதெல்லாம் கீழ்நிலை வேலைதான்
    உன்னை அடிமையாக்குற வேலைதான்!
    இதுவும் நெலைக்குமான்னு நெனைச்சிப்பார்த்து
    இழந்த வாழ்வை மீட்டெருக்கப் போராடு!
    அதற்கு பு.மா.இ.மு-வில் இன்றே இணைந்திடு!

Saturday, July 12, 2008

கல்விக் கடவுள் டில்லி பாபு!

கல்விக் கடவுள் சரசுவதி
கையிலிருக்கும்
வீணையை எறிந்து
வெகுநாளாயிற்று
எடை மிசினை ஏந்தியபடி
எதிர்பார்த்திருக்கிறான்
பக்தர்களை.

மெனக்கெட்டுப் படித்து
நல்ல மதிப்பெண் வாங்கிய
பையனை
பணக்கட்டு ஏதுமின்றி
பள்ளிப்படியிலேற்றினார்
சுமைதூக்கும் தொழிலாளி
டில்லிபாபு.

பத்தாயிரம்
நன்கொடை தந்தால்
பதினோராம் வகுப்பு
கிடைக்குமென்று
கட்டாயமாகச் சொன்னார்
பள்ளி நிர்வாகி
ஆலேசமடைந்த தொழிலாளியை
ஆற்றுப்படுத்தினர்
சில ஆசிரியர்கள்.

இங்காவது இத்தோடு,
மற்ற இடத்தில்
அதுக்கு இதுக்கு என்று
பணத்தைப் பறிப்பான்
கொத்தோடு!
கூட்டிக் கழித்துப்பார்!
பேசாமல்
கேட்டதைக் கொடுத்து
பிள்ளையைச் சேர்!
என்று
கணக்கு வாத்தியார்
புரியவைத்தார்.

கஷ்டப்பட்டு விதைச்சாதான்
இஷ்டப்பட்ட விளைச்சல் வரும்!
பருவத்தே பயிர் செய்ய
பணத்தைப் பார்க்காதே!
என்று
புத்தி சொன்னார்
புவியியல் ஆசிரியர்.

ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு -
அதுபோல
ஒவ்வொரு படிப்புக்கும்
ஒரு விலை உண்டு
என்ன நீ இது புரியாம இருக்க?
என்று
எரிச்சலடைந்தார்
அறிவியல் ஆசிரியர்.

தன்மையோடு இடைமறித்தார்
தமிழாசிரியர்;
உயிரும் மெய்யும் சேர்ந்தாதன்
உயிரமெய்யெழுத்து
அதுபோல-
பணமும் படிப்பும் சேர்ந்தால்தான்
பளபளப்பு
பணத்துக்காக
நல்ல பள்ளியை விட்டால்
அப்புறம்
உன் பையனின் தலையெழுத்து?

எதற்கும் சம்மதிக்காத
தொழிலாளியைப் பார்த்து
"நீ போய்யா வெளியிலே" என்று
வெறுப்புடன்
சத்தம் போட்டார் நிர்வாகி.
பதிலுக்கு
"இதாண்டா ஆயுத எழுத்து"
என்று
சுமைதூக்கும் கொக்கியால்
தலையில் எழுத..
இரத்த வெள்ளத்தில்
நிர்வாகி.
கைதாகி, வழக்கில்
தொழிலாளி.

இப்போது-
கட்டாய நன்கொடை
பள்ளியில் இரத்து.
கல்விக் கபாலத்தை
திறந்து விட்ட
டில்லி பாபுவை
கையெடுத்துக் கும்பிடுகிறது ஊர்.

-துரை.சண்முகம்

'கட்டாய நன்கொடை கேட்ட பள்ளி நிர்வாகியைத் தாக்கிய தொழிலாளி கைது' என்று பத்திரிக்கையில் வந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதை.


நன்றி : புதிய கலாச்சாரம் ஜுலை 2008
இணைப்பு